குற்றவிசாரணை முறைப்படி சிபிஐக்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை எப்படி விசாரிக்க முடியும்?.. சிலை கடத்தல் வழக்கில் பொன்.மாணிக்கவேலுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை:  சிலை கடத்தல் தடுப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஓய்வுபெற்ற தன்னை சிறப்பு அதிகாரியாக நியமிக்கும்படி உயர்  நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தமிழக அரசுக்கு எதிராகவும் அப்போதைய தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி ஆகியோருக்கு எதிராக கடந்த 2019ல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணை, போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என்று பல உத்தரவுகள் தனி நீதிபதிகளால் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து வழக்குகளையும் சிறப்பு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டுமென்று பொன்.மாணிக்கவேல் கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், யார் எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பது குறித்து தலைமை நீதிபதிதான் முடிவெடுப்பார் என்பதால் அவரிடம்தான் முறையீடு செய்ய வேண்டும். குற்ற விசாரணை முறை தொடர்புடைய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் எப்படி விசாரிக்க முடியும் என்று கேள்வி எழுப்பி, இந்த மனு மீது உத்தரவு பிறப்பிப்பதற்காக விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: