×

தொடர் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் அம்மா உணவகங்களை அறக்கட்டளை உதவியுடன் நடத்த மாநகராட்சி முடிவு: தமிழக அரசுக்கு பரிசீலனை

சென்னை: தொடர் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில், அம்மா உணவகங்களை தனியார் அறக்கட்டளை உதவியுடன் நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதிமுக ஆட்சியின் போது சென்னையில் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவு  வழங்குவதற்காக அம்மா உணவகம், கடந்த 2013ல் தொடங்கப்பட்டது. இதை சென்னை மாநகராட்சி  செயல்படுத்தியது. இந்த திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு  கிடைத்தது. இதையடுத்து, சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும், ஒரு வார்டுக்கு 2 மற்றும் அரசு மருத்துவமனைகளில் 7 என மொத்தம்  407 இடங்களில் இந்த அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன.

 இதில், பல்வேறு காரணங்களுக்காக 5  உணவகங்கள் மூடப்பட்டன. தற்போது, 402 அம்மா உணவகங்கள் செயல்பட்டு  வருகின்றன. அம்மா உணவகத்தில் தினசரி 2 லட்சம் இட்லி, 10 ஆயிரம் அளவில் சாதங்கள், 70 ஆயிரம் சப்பாத்திகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், தினசரி 5 லட்சம் ரூபாய் என, ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
 ஆனால், உணவகம் நடத்துவதற்கான செலவு ஆண்டுக்கு ரூ.140 கோடி ஆகிறது. இதனால், ரூ.120 கோடி ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சிக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே அம்மா உணவகத்தின் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் செயல்படும் அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்கு நிதி திரட்ட ஒரு அறக்கட்டளை அமைக்கலாம் என்று அந்த குழு பரிந்துரை அளித்தது. பல்வேறு அமைப்புகளிடம் நிதி பெற்று அம்மா உணவகத்தை நடத்தினால் நஷ்டத்தை தவிர்க்கலாம் என்று கூறப்பட்டது.

 அம்மா உணவக அறக்கட்டளை அமைக்க ஏற்கனவே அதிமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி அம்மா உணவக அறக்கட்டளையை தொடங்க தமிழக அரசும் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், அம்மா உணவகத்தை தொடர்ந்து செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அந்த கடிதத்தில், ‘‘அறக்கட்டளை தொடங்கிய பிறகு போதிய நிதி கிடைக்காத பட்சத்தில் அந்த நிதியை தமிழக அரசு முழுமையாக அளிக்குமா, நிதியே கிடைக்காவிட்டால் தொடர்ந்து அம்மா உணவகத்தை செயல்படுத்த அரசு நிதி அளிக்குமா’’ என கேள்வி எழுப்பி உள்ளது.

 இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:   அம்மா உணவகத்தை தொடர்ந்து நடத்த தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நஷ்டம் ஏற்படாமல் அம்மா உணவகத்தை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அறக்கட்டளைக்கு சமூக பங்களிப்பு நிதி மற்றும் பொதுமக்கள் விரும்பி நிதி அளிக்கும் பட்சத்தில் அவற்றை ஏற்பது குறித்து அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.   அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்ட நிதி, அம்மா உணவகத்தை செயல்படுத்த செலவான நிதி ஆகியவை பற்றி ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். எனவே பெறப்படும் நிதி, எவ்வித குற்றச்சாட்டுக்கும் இடம் கொடுக்கப்படாமல் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஊரடங்கின் போது ரூ.468 கோடி நஷ்டம்
 நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்ட நிலையில், ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றோர் நலன் கருதி அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. மேலும், அனைத்து தரப்பினருக்கும் மூன்று வேளையும் இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டன. இதன் காரணமாக அந்த ஆண்டு மட்டும், மாநகராட்சிக்கு ரூ.468 கோடி இழப்பு ஏற்பட்டது. அதேநேரம், சென்னையில் பலருக்கு, மூன்று வேளையும் அம்மா உணவகம் தான் உணவளித்தது. ஊரடங்கு தளர்வுக்குப் பின், மலிவு விலை விற்பனை தொடங்கினாலும் நஷ்டத்தை தவிர்க்க முடியவில்லை.

பள்ளிகளுக்கு சிற்றுண்டி
 சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் காலை சிற்றுண்டிக்கு, ஆண்டுக்கு ரூ.1.66 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. இந்நிலையில், தொடக்க பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டியை, அம்மா உணவகத்தில் இருந்து தயாரித்து வழங்கலாம் என மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அம்மா உணவகத்தில் உணவு தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது.  அவற்றை முழுமையாக பயன்படுத்த மாநகராட்சி  ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள அம்மா உணவகங்களை தேர்ந்தெடுத்து அங்கு, சிற்றுண்டி தயாரித்து கொண்டு செல்ல தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Amma ,Tamil Nadu Government , Continuity Loss, Amma Restaurant, Trust Aid, Corporation Decision, Consideration to Tamil Nadu Govt
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...