×

பேராவூரணி பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின-விவசாயிகள் வேதனை

பேராவூரணி : பேராவூரணி பகுதியில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் ஒரு சில இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயலில் தண்ணீர் தேங்கி பயிர்கள் சாய்ந்துள்ளன. அதேபோன்று பேராவூரணி பகுதியிலும் வயலில் நீர் புகுந்ததால் நெற் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

பேராவூரணி அருகே பாலத்தளி, எழுத்தணிவயல், கட்டையங்காடு, ஒட்டங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில், கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. ஆழ்துளை கிணறு மூலம் விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது கதிர் விட்டு, நெல்மணிகள் முற்றி, அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில், பேராவூரணி பகுதியில் கடந்த சில தினங்களாக மாலை நேரம் தொடங்கி அதிகாலை வரை, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

தொடர்ந்து ஒரு வார காலமாக பெய்து வரும் மழையால், பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், பலத்த காற்று காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த கதிர்கள் வயலிலேயே சாய்ந்து, வயலில் தேங்கி நிற்கும் மழைநீரில் நெல்மணிகள் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் நெல்மணிகள் முளைக்கும் நிலையில் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், வடிகால் அமைத்து தண்ணீரை வெளியேற்றவும் முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “சாகுபடி செய்யப்பட்டு இருந்த நெற்பயிர்கள் திடீர் மழையால் நீரில் மூழ்கி வீணாகி உள்ளது. ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில், தற்போது நெற்பயிர்கள் முழுவதுமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தண்ணீரில் விழுந்த நெல்மணிகள் முளைக்கத் தொடங்கி விட்டது. எனவே வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Piraoorani , Peravoorani: Paddy crops ready for harvest were submerged in water due to heavy rains in Peravoorani area. Due to this the farmers are suffering a lot
× RELATED பேராவூரணி ரயில் நிலையத்தில் புதர்...