×

இந்துசமய அறநிலைய துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: நீதிமன்ற அவமதிப்பில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சூளையில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள்,  நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக் கூறி சென்னை சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, சம்மந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நடவடிக்கையை விரைவுபடுத்த  கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த நிலையில் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று சுகுமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை உதவி ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், கோயில் சொத்தை குத்தகைக்கு எடுத்திருந்த தனி நபர்களுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

  வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு ஏற்பட்ட காலதாமதத்திற்கான காரணங்களை உதவி ஆணையர் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்து உதவி ஆணையர் வருத்தம் தெரிவிக்கவில்லை. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாயும், உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறதது. இந்த அபராத தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு அவர்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Hindussian State Department of Auditorium , Hindu Charities Department, Rs.1 Lakh Fine, Court Contempt, Court Order
× RELATED புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ...