
திருவனந்தபுரம்: கேரள அரசின் இவ்வருட ஓணம் பம்பர் லாட்டரி வெளியான ஒரு வாரத்திலேயே 11 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. கேரளாவில் சில வருடங்களுக்கு முன்பு வெளிமாநில, தனியார் லாட்டரிகள் விற்பனைக்கு அரசு தடை விதித்தது. தற்போது, அரசு லாட்டரி மட்டுமே விற்கப்படுகிறது. ஓணம், சித்திரை விஷு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்பட பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் பம்பர் லாட்டரி குலுக்கல் நடத்தப்படுகிறது.
ஓணம் பண்டிகைக்குத்தான் மிக அதிக பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. கடந்த வருடம் வரை முதல் பரிசு ரூ.12 கோடி வழங்கப்பட்டது. இந்த வருடம் முதல் பரிசாக ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இவ்வளவு பெரிய பரிசுத்தொகையை எந்த மாநிலமும் அறிவித்ததில்லை. 2வது பரிசு ரூ.5 கோடி, 3வது பரிசு 10 பேருக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படுகிறது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500.
கடந்த 18ம் தேதி விற்பனைக்கு விடப்பட்ட டிக்கெட்டுகள், ஒரே வாரத்தில் 11 லட்சம் விற்றுள்ளது. கடந்த வருடம் 54 லட்சம் டிக்கெட்கள் விற்கப்பட்டது. இந்த வருடம் எதிர்பார்த்ததை விட அதிகமாக விற்பனையாகி வருவதால், கடந்த வருடத்தை விட 36 லட்சம் அதிகமாக 90 லட்சம் டிக்கெட்டுகளை அச்சடிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், அரசுக்கு ரூ.50 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும்.