இன்று ஆடி அமாவாசை; ராமேஸ்வரம், கன்னியாகுமரி கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடல், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று புனித நீராடி தர்ப்பணம் செய்தனர். ஆடி அமாவாசை, தை, மஹாளய அமாவாசை போன்ற நாட்களில் ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் தீர்த்தமாடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவதை தொன்று தொட்டு கடைபிடித்து வருகின்றனர். இந்த அமாவாசை தினங்கள் மட்டுமின்றி, மாதந்தோறும் வரும் அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் ராமேஸ்வரத்தில் ஏராளமான பக்தர்கள் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு தடை அமலில் இருந்ததால் ஆடி, தை அமாவாசை நாட்களில் ராமேஸ்வரத்திற்கு தீர்த்தமாட வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப்பின், ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் இன்று புனித நீராடினர். ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறந்து 5.30 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜை, 6 மணிக்கு துவங்கி சுவாமி, அம்பாள் சன்னதிகளில் 6 கால பூஜை நடைபெற்றது. வெளியூர்களில் இருந்து நேற்று இரவிலேயே வாகனங்களில் ராமேஸ்வரம் வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி சூரிய தரிசனம் செய்தனர். காலை 11 மணிக்கு மேல் ராமர் தங்க கருட வாகனத்தில் அக்னிதீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள்பாலித்தார்.

அக்னிதீர்த்த கடலில் நீராடியபின் தர்ப்பணம் செய்து திதி கொடுத்து முன்னோர்களை வழிபட்ட பக்தர்கள் கோயில் வடக்கு கோபுரம் வழியாக கோயிலுக்குள் சென்று கோடி தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்களிலும் நீராடினர். தொடர்ந்து கோயில் பிரகாரத்தில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். இதேபோல் ரங்கம், திருவையாறு, வேதாரண்யத்தில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக திருச்சி ரங்கம் அம்மாமண்டபம் படித்துறைக்கு அதிகாலையிலேயே மக்கள் குவிந்தனர்.

அதேபோல் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்பமண்டப படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க இன்று அதிகாலை 4.30 மணி முதல் பல்வேறு ஊர்களிலிருந்து  மக்கள் வந்தனர். ஆடி அமாவாசையையொட்டி இன்று காலை திருவையாறு ஐயாறப்பர், தர்மசம்வர்த்தினி தீர்த்தவாரி நடந்தது. அப்பர் பெருமான் சிவபெருமானை காணவேண்டும் என சென்றபோது, அவரது பக்தியை மெச்சிய சிவன் திருவையாறில் அப்பருக்கு காட்சி கொடுத்தார். அந்த தினமும் ஆடி அமாவாசை தினத்தில் வருவதால், இன்று இரவு 9 மணிக்கு ஐயாறப்பர் கோயிலில் அப்பர் கயிலை காட்சி நடக்கிறது. இதுபோல காவிரி கடலில் கலக்கும் பூம்புகார், வேதாரண்யஸ்வரர் கோயில் கடற்கரையிலும் இன்று அதிகாலை முதலே குவிந்த பொதுமக்கள் அரிசி, காய்கறி, பழங்கள், எள் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர்.

கன்னியாகுமரி

ஆடி அமாவாசையில் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் புனித நீராடி, இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்படி இன்று கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கன்னியாகுமரியில் குவிந்தனர். பின்னர் முக்கடல் சங்கமத்தில் அதிகாலை 4 மணி முதல் புனித நீராடி இறந்த முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுத்தனர்.

அதன் பிறகு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.  இதற்கிடையே 45 வயது மதிக்கத்தக்க பக்தர் ஒருவர் காலையில் கடலில் தர்ப்பணம் முடித்து விட்டு, கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்து இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: