×

அதிமுக பொதுக்குழு விவகாரம்... ஓபிஎஸ் மனு மீது எங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது : கட்சி சார்பில் கேவியட் மனு!!

டெல்லி : அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக அதிமுக தலைமை நிலைய செயலகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘பொதுக்குழுவை நடத்தலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம்’ என தீர்ப்பு அளித்தது. கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்தது. எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதை தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கடந்த 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை. அதனால் பொதுக்குழு நடத்த
அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்க இருந்த நிலையில், மனு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு ஓபிஎஸ் மனுவை விசாரிக்க உள்ளது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக அதிமுக தலைமை நிலைய செயலகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னரே இவ்வழக்கில் (ஓபிஎஸ் மனுவில்) எந்தவொரு உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : AIADMK ,OPS ,Caveat , AIADMK, General Committee, Affairs, OPS
× RELATED ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக, இரட்டை...