அக்னி வீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தின் உச்சவரம்பை மீறுமா?...ஒன்றிய அரசு விளக்கம்

புதுடெல்லி: ‘ஒன்றிய ஆயுதப் போலீஸ் படைகளில் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதால், உச்ச நீதிமன்றத்தின் 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை பாதிக்காது,’ என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார். அக்னிபாதை திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படும் வீரர்கள்,  தங்களின் 4 ஆண்டு பணிக்காலம் முடிந்த பின்பு, ஒன்றி ஆயுதப்படை அல்லது  துணை ராணுவப் படைகளில் சேரலாம். இவர்களுக்காக இவற்றில் 10 சதவீத இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

 இது தொடர்பாக,  மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளிக்கையில், ‘கான்ஸ்டபிள் (பொதுப்பணி), ரைபிள்மேன், ஒன்றிய ஆயுதக் காவல் படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படைகளின் பணிகளுக்கான ஆட்சேர்ப்பில் அக்னிவீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க, கொள்கை ரீதியாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

 இந்த இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தின் 50 சதவீத உச்சவரம்பை பாதிக்காது. முன்னாள் அக்னி வீரர்களுக்கு அதிக வயது வரம்பில் தளர்வு மற்றும் உடல் திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்,’ என்று தெரிவித்தார்.

Related Stories: