×

மாணவர் சேர்க்கை அதிகரிப்பு எதிரொலி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 900 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு: மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற திட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில், ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க 900 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம் வரும் 30ம் தேதி நடைபெறும் மன்ற கூட்டத்தில் நிறைவேற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என மொத்தம் 281 பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் ஆண்டுக்கு, 1.50 லட்சம் பேர் வரை படிக்கும் வசதி உள்ளது. அதே நேரம், தனியார் பள்ளிகள் அதிகரிப்பு, அதன் மீதான பெற்றோர்களின் மோகம் போன்றவற்றால் கடந்த காலங்களில் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது.

 கடந்த 2019ம் ஆண்டு வரை, சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 90 ஆயிரம் என்ற அளவில் தான், மாணவர்கள் படித்து வந்தனர். ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் சென்னை மாநகராட்சி பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதற்கு ஏற்றவாறு அடிப்படை கட்டமைப்புகள் முதல் வகுப்பறைகள் வரை நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக, பள்ளி சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு, சுத்தம், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. கடந்த, 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது, ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், பெற்றோர் பலர் தனியார் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தனர்.

இதனால், தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள், மாநகராட்சி பள்ளிகளை நோக்கி இடம் பெயர்ந்தனர். அதன்படி, மாநகராட்சி பள்ளிகளில் தற்போது, மாணவர் எண்ணிக்கை, 1.10 லட்சமாக உயர்ந்து உள்ளது. மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பால் உற்சாகம் அடைந்துள்ள மாநகராட்சி நிர்வாகம், மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பை நவீனப்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அதன்படி, உலகத் தரத்தில் வகுப்பறைகள் உருவாக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டு நிதியுதவியுடன் ‘சிட்டிஸ்’ திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தியது. இத்திட்டத்தில், ரூ.95 கோடி மதிப்பில், 28 பள்ளிகள் ‘மார்டன்’ எனப்படும் நவீன வகுப்பறைகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதில், டிஜிட்டல் முறையில் கல்வி, நவீன ஆய்வகம், ஆசிரியர்களுக்கு பயிற்சி, விளையாட்டு வசதி உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளன.

இதைத் தவிர, சிங்கார சென்னை 2.0 திட்டத்தில், ரூ.50 கோடி மதிப்பில் 22 பள்ளிகளில் நவீன வகுப்பறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. துவங்கியுள்ளது. மொத்தம் 50 பள்ளிகளில் ரூ.145 கோடி செலவில் உலகத்தரத்திலான வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.  இந்த பள்ளிகளின் மேசை, நாற்காலி போன்றவற்றிற்கு, சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனமும், ரூ.10 கோடி வழங்கியுள்ளது. அதேபோன்று, சென்னை மாநகராட்சியின் மீதமுள்ள பள்ளிகளையும் நவீன வகுப்பறைகளாக மாற்றுவதற்கான பணிகளும் தொடங்கியுள்ளது. இதனால் சென்னை மாநகராட்சி பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாறி வருகிறது. இதனால் மாணவர் சேர்க்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மொத்தம் உள்ள 281 பள்ளிகளில் 3800 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை போக்குவதற்காக மாநகராட்சியின் கல்வித் துறை தற்காலிகமாக 900 ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது.  இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:  சென்னை மாநகராட்சி பள்ளிகள் அனைத்தும் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வகுப்பறைகள் நவீனப்படுத்தப்பட்டு அடிப்படை வசதிகள் எல்லாம் மேம்படுத்தடுப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் பலர் மாநகராட்சி பள்ளிகளை தேடி வரத் தொடங்கியுள்ளனர்.

எனவே, அதற்கு ஏற்றவாறு ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய பொறுப்பு மாநகராட்சி நிர்வாகத்துக்கு உள்ளது. அதன்படி, பள்ளி மேலாண்மை குழு மூலம் 900 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 400 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு எவ்வளவு ஊதியம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான தீர்மானம் வரும் மன்ற கூட்டத்தில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chennai Corporation Schools , Decision to appoint 900 temporary teachers in Chennai Corporation schools echoes increase in student enrollment: plan to pass resolution in council meeting
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில்...