×

கேரளாவில் இருந்து வந்த 3 மர்ம நபர்களால் பாஜ இளைஞரணி நிர்வாகி வெட்டிக்கொலை: கர்நாடகாவில் பதற்றம்; போலீஸ் குவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக இளைஞரணி நிர்வாகி பிரவீன் நெட்டாரு கேரளாவில் இருந்து வந்த 3 மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில்பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் சுல்யா பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞர் அணி நிர்வாகி பிரவீன் நெட்டாரு (29). இவர் இப்பகுதியில் கோழிக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்றிரவு பெல்லாரேவில் பிரவீன் நெட்டாரு இருந்த போது, கேரள பதிவெண் கொண்ட பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று பேர் அவரை தாக்கினர். பின்னர் அவரை கோடரியால் சரமாரியாக வெட்டிப் போட்டுவிட்டு தப்பிஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் பிரவீன் நெட்டாரு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, கொலைக்கான காரணம் மற்றும் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். தற்போது புத்தூர் பிரகதி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக பிரவீன் நெட்டாருவின் சடலம் வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வரவேண்டும் எனக்கூறி, குறிப்பிட்ட அமைப்பினர் நேற்றிரவு தர்ணாவில் ஈடுபட்டனர். புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரிஷிகேஷ் சோனாவானே, நேற்றிரவு இரவு மருத்துவமனைக்குச் சென்று, தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினார். புத்தூரில் பதற்றமான சூழல் நிலவுவதால் நேற்றிரவு முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாஜக நிர்வாகி கொலை சம்பவம் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘கொடூரமான கொலைக்கு காரணமான குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்; அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; உயிரிழந்த பிரவீன் நெட்டாரு குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பிரவீனின் ஆன்மா சாந்தியடையட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் பிரவீன் நெட்டாரு கொலை சம்பவத்தால் சுல்யா, புத்தூர், பெல்லாரே ஆகிய பகுதிகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளதால், அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தூர் முழுவதும் 144 தடை உத்தரவு  அமல்படுத்தப்பட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை  ஏற்படாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகிறோம். கேரள எல்லைகளில் தீவிர வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கொலையான பிரவீன் நெட்டாரு, பாஜக இளைஞரணி நிர்வாகியாவும், சமூக வலைதளத்தில் தீவிரமான கருத்துகளையும் பதிவிட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெல்லாரேயில் மசூத் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பிரவீன் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்று கூறினர்.

Tags : BJP ,Kerala ,Karnataka , Young BJP executive hacked to death, by 3 mysterious men from Kerala, Tension in Karnataka, Police build-up
× RELATED கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர்...