
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நாவடக்கத்துடன் பேசாவிட்டால், அடுத்தடுத்த ஆடியோக்கள் வெளியே வரும், என ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தற்போது இரு அணியை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி பேசிக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ் அணியினர் பொன்னையன் கட்சி நிர்வாகி ஒருவரிடம் பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பொன்னையனின் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார்.
இந்நிலையில் தொடர்ந்து இரு அணியை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, கட்சி தலைமை இடத்தை சூறையாடிய ஓபிஎஸ் வீட்டை நாங்கள் சூறையாடுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என பேசி இருந்தார். இது ஓபிஎஸ் அணியினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கலவரத்தை தூண்டும் வகையில் ஆர்.பி.உதயகுமார் பேசுகிறார் என பலரும் குற்றம் சாட்டினர். இந்நிலையில் ஓபிஎஸ் அணியின் தீவிர ஆதரவாளரும், தற்போது மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நேற்று மாலை அவரது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ஆர்.பி.உதயகுமார் காலங்காலமாக அதிமுகவில் இருந்த நிர்வாகி இல்லை. ஒரு விபத்தில் அதிமுகவிற்கு வந்து, அதன்பிறகு அம்மாவையும், சசிகலாவையும் ஏமாற்றி டாக்டர் வெங்கடேஷ் மூலமாக பதவியை பெற்று அமைச்சராக ஆனவர்.தற்போது ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. ஆர்.பி.உதயகுமார் செய்த ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். அவை நிரூபிக்கப்பட்டால் காலம் முழுவதும் அவர் சிறையில் தான் இருப்பார்.
முதலில் இரட்டை தலைமைதான் வேண்டும் என துதி பாடியவர், அதன் பிறகு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என துதி பாட ஆரம்பித்தார். இவ்வாறு ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருவரையும் பிடித்து மாறிமாறி பேசிக்கொண்டு வருகிறார். உதயகுமாருக்கு இருப்பது வாயா அல்லது கூவமா என தெரியவில்லை அம்மாவுக்கு கோயில் கட்டுகிறேன் என்று கூறி உதயகுமார் வீட்டில் இறப்பவர்களை அங்கு கொண்டு வந்து புதைத்து அதனை சமாதியாக மாற்றி வருகிறார்.
தற்போது ஓபிஎஸ்சின் மகனை ராஜினாமா செய்ய கூறும் உதயகுமார் திருமங்கலம் தொகுதியில் அவர் ராஜினாமா செய்து விட்டு மீண்டும் அங்கு நிற்க தயாரா என்றும் அவ்வாறு அங்கு நின்று அவர் ஜெயித்து விட்டால் நான் அரசியலில் இருந்து வெளியேறி விடுகிறேன் எனவும் தெரிவித்தார். மேலும், பொன்னையன் அது தனது ஆடியோ இல்லை என்று சொன்னால் மீண்டும் ஒரு ஆடியோ வெளியிடுகிறேன். இன்று நாள் சரியில்லை, நல்ல நாளாக பார்த்து மேலும் சில ஆடியோக்களை வெளியிடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். ஆர்.பி.உதயகுமார் செய்த ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். அவை நிரூபிக்கப்பட்டால் காலம் முழுவதும்
அவர் சிறையில் தான் இருப்பார்.