×

பந்தலூர் அருகே வீடுகளை இடித்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை கும்கிகள் உதவியுடன் வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்

பந்தலூர்: பந்தலூர் அருகே வீடுகளை இடித்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை, கும்கி உதவியுடன் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா வாழவயல் மற்றும் செத்தகொள்ளி பகுதியில் கடந்த 22ம் தேதி எட்டு வீடுகளை காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்தியது.

இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேவாலா வனச்சரக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து, குடியிருப்புகளை இடித்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்கு முதுமலை பகுதியில் இருந்து விஜய், கிரி ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் சுற்றித்திரியும் நான்கு காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக, 3 குழுக்கள் அமைக்கப்பட்டு தேவாலா வன சரகர் அய்யனார் தலைமையில் வனப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு யானைகள் அப்பகுதியில் இருந்து செல்லாமல் இருப்பதால் கும்கி யானைகளை வைத்து காட்டு யானைகள் இருக்கும் பகுதிக்கு சென்று அவற்றை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை அதே பகுதியில் உள்ள வனங்களில் விடாமல் முதுமலை போன்ற அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விரட்டுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Bandalur ,Kumkis , Efforts are being made to drive the wild elephants that are demolishing houses near Bandalur into the forest with the help of kumkis.
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா