×

காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை, நாவலூரில், காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நாவலூரில் உள்ள ஓசோன் டெக்னோ பூங்காவில் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ். பாலாஜி எம்.எல்.ஏ,  வழிகாட்டி நிறுவனத்தின் இயக்குநர் பூஜா குல்கர்னி, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத்,  காக்னிசன்ட் இந்திய நிறுவனத்தின் இயக்குநர் ராஜீவ் நம்பியார், உலகளாவிய விநியோகத்  தலைவர் ஆன்டி ஸ்டப்போர்டு, சென்னை மையத்  தலைவர் கணேஷ் கல்யாணராமன், அரசு  விவகாரங்கள் தலைவர் அஸ்ரா கவுரவ் மற்றும் நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.

பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்து வருகிறது. 2030ம் ஆண்டில், தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக,  ஹைடெக் எலக்ட்ரானிக்ஸ், வாகன உற்பத்தி போன்ற துறைகளைச் சார்ந்த பல உலகளாவிய நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க ஏற்ற இடமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.

காக்னிசன்ட் நிறுவனம் 1994ம் ஆண்டு தமிழ்நாட்டில் நிறுவப்பட்டது, முதலில் சென்னையில் 50 பணியாளர்களுடன் செயல்படத் தொடங்கிய இந்நிறுவனம் தற்போது சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகரங்களில் சிறப்பான முறையில் செயல்பட்டு, உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. உலகளாவிய மாபெரும் நிறுவனமாகவும், அமெரிக்காவில் பட்டியலிடப்பட்ட முதல் பில்லியன் டாலர் நிறுவனங்களில் ஒன்றாகவும் காக்னிசன்ட் நிறுவனம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும், டிஜிட்டல் திறன் மேம்பாட்டிலும், தமிழ்நாட்டை உலகளாவிய தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றுவதற்கும் தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கி வருகிறது. சுமார் 81,000க்கும் அதிகமான பணியாளர்களை கொண்டுள்ள இந்நிறுவனம், பெண்களை பெருமளவில் பணியமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Chief Minister ,M. K. Stalin ,Cognizant Technology Solutions , Chief Minister M. K. Stalin inaugurated the new office of Cognizant Technology Solutions.
× RELATED நீட் மற்றும் பிற நுழைவுத் தேர்வுகள்...