×

வடமதுரை அருகே முருங்கை மரங்களில் நோய் தாக்குதல்-பாதுகாப்பு முறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் விளக்கம்

வடமதுரை : திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே தென்னம்பட்டி கிராமத்தில் மட்டும் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் முருங்கை பயிரிட்டுள்ளனர். பருவநிலை மாற்றம் காரணமாக செடி முருங்கைகள் அதிகமாக பழ ஈ தாக்கம் மற்றும் பூச்சி நோய், பிசின் விழுந்து பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கெச்சாணிப்பட்டியை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் கூறுகையில், நான் நான்கு ஏக்கர் பரப்பளவில் செடி முருங்கை பயிரிட்டுள்ளேன். போன மாதம் முருங்கை கிலோ ஒன்றுக்கு 70 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த மாதம் ரூபாய் 16க்கு விற்பனை ஆகிறது. இதற்கு காரணம் பருவநிலை மாற்றம் அடைந்ததால் தொடர் சாரல் மழை பெய்ததால் பூ கொட்டி விட்டது.

பிசின் நோய் அடித்து உள்ளதால் விலை குறைவாக உள்ளது என்றார். சுப்பிரமணி கூறுகையில், சுமார் 7 ஏக்கர் செடி முருங்கை பயிரிட்டுள்ளேன். இதில் நோய் தாக்கப்பட்டு இரண்டு ஏக்கர் அழிந்து விட்டது. பருவநிலை மாற்றம், ஈரப்பதமான காற்று அனைத்தும் செடி முருங்கையின் நோய் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குறைந்தபட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் செலவு செய்துள்ளேன். செடி முருங்கையில் நோய் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.

இது குறித்து வடமதுரை வேளாண் உதவி இயக்குனர் சித்தார்த் கூறுகையில், வடமதுரை வட்டாரத்தில் தோட்டக்கலை பயிரான முருங்கை சாகுபடி சுமார் 200 ஏக்கர் அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது பருவநிலை மற்றும் மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் விவசாயிகள் தங்கள் முருங்கைப் பயிரினை பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க அறிவுரை வழங்கப்படுகிறது. பூச்சிகளால் முக்கியமாக பழ ஈ தாக்குதல் இருக்கும்போது காய்களில் பாதிப்பு ஏற்பட்டு காய்களில் பிசின் வடிதல், சிறுத்து போதல் போன்றவை ஏற்படும். பழ ஈயை கட்டுப்படுத்த இயற்கை முறைகளை கையாள வேண்டும். இதன்படி, பழ ஈயின் முட்டைகளை அழிக்க நிலத்தை நன்கு வெயில் படும்படி உழுது விட வேண்டும்.  

உழும்போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு உழ வேண்டும். 1/2 லிட்டர் தண்ணீர் பாட்டிலில் சிறிது கருவாடு இட்டு மூடியில் துளை ஒன்று இட்டு வயலில் ஆங்காங்கே கட்டி தொங்கவிட வேண்டும். கடைகளில் கிடைக்கும் ஒரு ஈஸ்ட் மாத்திரை மற்றும் 100 கிராம் நாட்டு சர்க்கரை 1/2 லிட்டர் தண்ணீர் பாட்டிலில் விட்டு மூடியில் துளையிட்டு ஆங்காங்கே தொங்க விடுவதன் மூலம் பழ ஈயை கவர்ந்து அழிக்கலாம்.

இதுபோக, இயற்கை முறை அல்லாமல் வேதியியல் முறையிலும் கட்டுப்படுத்தலாம். இதன்படி, மரம் ஒன்றுக்கு நூறு கிராம் கார்போபிரேரான் குருணை மருந்து இடலாம். பைரித்தெராய்டு மருந்துகள் 2 மில்லி லிட்டர் ஒன்றுக்கு கலந்து தெளிக்க வேண்டும். வேதியியல் முறையில் மருந்துகள் பயன்படுத்தும்போது 10 முதல் 15 நாட்களுக்கு கீரைகள் மற்றும் காய்கள் பறிப்பதை தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த பட்டம் செடி முருங்கை நடும்போது முருங்கை விதை அல்லது செடி முருங்கை வழங்குதல் போன்றவைகள் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags : Murunga ,Vadamadurai , Vadamadurai: Moringa has been cultivated on an area of 200 acres only in Thennampatti village near Vadamadurai, Dindigul district.
× RELATED திமுக ஆலோசனைக் கூட்டம்