பைக்கில் சென்ற நபரை கத்தியால் குத்தி ரூ.1 லட்சம், 69 கிராம் தங்கம் கொள்ளை: ஹவாலா பணமா? போலீசார் விசாரணை

சென்னை: திருவல்லிக்கேணியில் பைக்கில் சென்ற நபரை வழிமறித்து கத்தியால் குத்தி ₹1 லட்சம் ரொக்கம் மற்றும் 69 கிராம் தங்க கட்டியை கொள்ளையடித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவல்லிக்கேணி முக்தருனிஷா பேகம் தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது (41). இவர் நேற்று காலை திருவல்லிக்கேணி ஓவிஎம் தெருவில் உள்ள தனது நண்பர் தங்கியுள்ள  விடுதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். சிறிது தூரம் சென்றதும், முகக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், பைக்கில் சென்ற சாகுல் அமீதை வழிமறித்து, கத்தியால் குத்திவிட்டு அவர் வைத்திருந்த ₹1 லட்சம் மற்றும் 69 கிராம் தங்க கட்டி, அவர் ஓட்டி வந்த பைக், செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மாயமானார்.

இந்த சம்பவத்தில் சாகுல் அமீதுக்கு மூன்று இடத்தில் பலத்த காயங்கள் மற்றும் இடது கால் முட்டியிலும் காயம் ஏற்பட்டது. வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.பின்னர் சம்பவம் குறித்து சாகுல் அமீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், புகார் அளித்த சாகுல் அமீதிடம் வழிப்பறி செய்யப்பட்ட ₹1 லட்சம் மற்றும் 69 கிராம் தங்க கட்டிக்கான ஆவணங்களை போலீசார் கேட்டுள்ளார். ஆனால் அவரிடம் முறையான ஆவணங்கள் இல்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் வழிப்பறி செய்யப்பட்ட பணம் ஹவாலா பணமாக இருக்காலம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிவில் தான் பணம் மற்றும் தங்கம் குறித்து முழு விவரங்களும் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: