×

கள்ளக்குறிச்சி கலவரத்தில் விட்டுச்செல்லப்பட்ட 141 இருசக்கர வாகனம்: பதிவெண்களைக் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள போலீசார் தீவிரம்

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் கலவரத்தின் போது விட்டுச்செல்லப்பட்ட 141 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி, அதன் பதிவெண்களை கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் +2 வகுப்பு படித்து வந்த மாணவி, கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனையடுத்து, கடந்த 17ம் தேதி சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி முன்பு மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. பள்ளிப்பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டதோடு, தீவைத்தும் கொளுத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் மற்றும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனங்களை போலீசார் விரட்டியடித்தபோது, அப்படியே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். இதனால் தனியார் பள்ளி அமைந்துள்ள பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புற சாலையோரங்களிலும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் கேட்பாரற்று கிடந்தன. அப்படிக்கிடந்த 141 இருசக்கர வாகனங்களை போலீசார் கைப்பற்றி, சின்னசேலம் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த இருசக்கர வாகனங்களின் பதிவெண்களை கொண்டு அதன் உரிமையாளர்களை கண்டறிந்து விசாரணை நடத்தி கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் முடிவடைந்ததும், 141 இருசக்கர வாகனங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர். 


Tags : Kallakkuruchi , Kallakurichi, two-wheeler, registration, police
× RELATED கள்ளக்குறிச்சி அருகே மாமந்தூர்...