×

திருக்கனூரை சுற்றியுள்ள கிராமங்களில் விளை நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்

திருக்கனூர் : திருக்கனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள  விளை நிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து நெல், மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த காட்டுப்பன்றிகளை விரட்டி அடிக்கவும், அவற்றை கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி-தமிழக எல்லைப்பகுதியான சங்கராபரணி ஆற்றின் கரையோரம் புதுச்சேரி பகுதியில் செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, சுத்துகேணி, குமாரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களும், தமிழக பகுதியில் பொம்பூர், பொன்னம்பூண்டி, ஐவேலி, இலையாண்டிபட்டு, மதுரப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களும் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் நெல், மணிலா, மரவள்ளி, சவுக்கு, கொய்யா உள்ளிட்டவற்றை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இந்நிலையில் விளை நிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை சேதம் ஏற்படுத்துவதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கும், புதுவை அரசுக்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, தமிழ்நாடு வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் போட்டு தமிழக பகுதியில் காட்டுப்பன்றிகள் வருவதை தடுக்க பல்வேறு ஆலோசனை வழங்கினர். அதேபோல், புதுச்சேரி வேளாண் அதிகாரிகளும் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி வனத்துறையுடன் இணைந்து காட்டு பன்றிகளை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கட்டுப்பன்றிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் அவற்றின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, திருக்கனூரை சுற்றி கிராமங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து நெல், மரவள்ளி ஆகிய பயிர்களை அதிகமாக சேதப்படுத்தி விட்டு செல்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

 இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் காரணத்தால், விவசாயிகள் தங்களது பயிர்களை காப்பாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தாங்களாகவே மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பயிர்களை சுற்றி பழைய சேலையை கட்டி வைப்பது, நிலங்களை சுற்றி பழைய சாக்குகளை கம்பில் சுற்றி வைப்பது, பன்றிகளை விரட்டும் வகையில் ஆடியோ பதிவு செய்து ஒலிக்க வைப்பது, இரவு நேரங்களில் குடில் அமைத்து பட்டாசு வெடிப்பது போன்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

 தற்போது புதுவிதமாக விளை நிலத்தில் நான்கு புறங்களிலும் கம்பி கட்டி, அதில் காலி பாட்டில்களை தொங்க விட்டுள்ளனர். காற்றடிக்கும் போது, பாட்டில்கள் கம்பியில் பட்டு சத்தம் எழுப்புகிறது. இந்த சத்தம் கேட்டு காட்டுப்பன்றிகள் ஓடிவிடும் என்ற நம்பிக்கையில் இதனை விவசாயிகள் செய்துள்ளனர். இதுபோல் பல்வேறு புது முயற்சிகளை விவசாயிகள் செய்தாலும், காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் குறைந்தபாடில்லை. சில சமயங்களில் விளை நிலத்தில் தனியாக இருப்போரையும் காட்டுப்பன்றிகள் தாக்கி விட்டு செல்கிறது.

இதனால் விவசாயிகள் அச்சத்துடன் விவசாயம் செய்ய வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  ஏற்கனவே விவசாயம் நலிவடைந்துவிட்டது. தற்போது குறைந்த விவசாயிகளே விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற சூழலில் விவசாயிகளுக்கு வில்லனாக இருக்கும் காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தை தடுக்க அரசு தரப்பில் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே,  புதுவை அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக காட்டுப்பன்றிகளை விரட்டி அடிக்கவும், அவற்றை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thirukkanur , Tirukanur: Wild boars enter paddy, maravalli and paddy fields in Tirukanur and surrounding villages.
× RELATED திருக்கனூர் அருகே சாமி ஊர்வலம் வரவேண்டி கிராம மக்கள் திடீர் மறியல்