×

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் தொடர்மழையால் வல்லிபுரம் பாலாற்று தடுப்பணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் தொடர் கனமழையால் வல்லிபுரம் பாலாற்று தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள குடகு மலையில் தொடங்கி ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உள்ளிடக்கிய பாலாறு நீண்டு திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட பொன் விளைந்த களத்தூர், ஆனூர், எலுமிச்சம்பட்டு, வல்லிபுரம், விளாகம், பாண்டூர், இரும்புலிச்சேரி, நெரும்பூர், நல்லாத்தூர், ஆயப்பாக்கம் வழியாக சென்று வாயலூர் என்ற பகுதியில் கடலில் இணைகிறது. (கலக்கிறது) இத்தனை ஆண்டுகள் மழைக்காலத்தில் பெருவெள்ளம் ஏற்படும் போதெல்லாம் இந்த பாலாற்றில் வெள்ள நீர் வழிந்தோடி வீணாக கடலில் கலக்கும்.

இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட வல்லிபுரம் மற்றும் வாயலூர் ஆகிய பகுதிகளின் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்கப்பட்டதில் தற்போது சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் வல்லிபுரம் பாலாற்றின் குறுக்கேயும் வாயலூர் பாலாற்றின் குறுக்கேயும் கட்டப்பட்ட தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பெருகி வருவதால் பாலாற்றை ஒட்டியுள்ள சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பாலாற்றை ஒட்டியுள்ள விவசாயிகள் கூறுகையில், இத்தனை ஆண்டுகள் எத்தனையோ கன மழை பெய்த போதிலும், பெரு வெள்ளம் சூழ்ந்த போதிலும் பாலாற்றின் முழு கொள்ளவை எட்டி பாலாறு முழுதும் நிரம்பி வழிந்தும் மழை நீர், (பாலாற்று நீர்) வீணாக கடலில் கலந்தது. இந்த திருக்கழுக்குன்றம் ஒன்றியப் பகுதிகளில் உள்ள பாலாற்றின் குறுக்கே பல்வேறு இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
 இந்நிலையில் சமீபத்தில் எங்கள் பகுதியில் உள்ள பாலாற்று பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டது. மேலும் தொடர் மழையால் இத்தடுப்பணை நிரம்பி வழிகிறது. நிலத்தடி நீர் மட்டம் பெருகி பாலாற்றங்கரையோரம் உள்ள விவசாயிகளான எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது என்றனர்.

Tags : Vallipuram ,Thirukkalukkunram , Vallipuram dam fills due to continuous rain in Thirukkalukkunram union: Farmers happy
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்