×

சட்டவிரோதமாக மது பார் விவகாரம்; ஸ்மிருதி இரானி மகளுக்கு பிரியங்கா சதுர்வேதி சப்போர்ட்: சமூக வலைத்தளத்தில் காரசார பதிவு

மும்பை: சட்டவிரோத மதுபார் விவகாரத்தில் ஸ்மிருதி இரானி மகளுக்கு ஆதரவாக பிரியங்கா சதுர்வேதி பதிவிட்டதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், அதற்கும் அவர் பதிலளித்துள்ளார். ஒன்றிய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி, இறந்தவரின் பெயரில் உரிமம் பெற்று சட்டவிரோதமாக மது பார் நடத்துவதாக காங்கிரஸ் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதற்கு ஸ்மிருதி இரானி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஸ்மிருதி இரானியின் பெயரைக் குறிப்பிடாமல் சிவசோனா எம்பி பிரியங்கா சதுர்வேதி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘இந்தியாவில் உணவகம் நடத்துவதற்கான உரிமம் பெறுவதற்கான தண்டனை என்ன என்பது 18 வயது இளைஞர்களுக்குத் தெரியாது.

எனது அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு இளம்பெண்ணின் தாயாக பேசுகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இவரது கருத்துக்கு சமூக ஊடங்களில் எதிர்வினைகள் எழுந்தன. அதில் ஒருவர் வெளியிட்ட பதிவில், ‘சாதாரண குடிமகன் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருந்தால் இவ்வாறு கூறியிருப்பீர்களா?’ என்று பதிவிட்டிருந்தார். அதற்கு மறுபதிவு போட்டுள்ள பிரியங்கா சதுர்வேதி, ‘முற்றிலும் எவ்வித பின்னணியும் இல்லாமல் எனது 18 வயது சகோதரர் மும்பை வந்தார். இதேபோன்ற கனவுடன் மும்பை வந்த அவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அவரது கனவை நனவாக்க முயன்றும், பெரும் இழப்புகளையும் மனநலப் பிரச்னைகளையும் எதிர்கொண்டார். எனவே பிரச்னை எங்கிருந்து வருகிறது என்று எனக்குத் தெரியும். எனவே அமைதியாக இருங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Priyanka Chaturvedi ,Smriti Irani , Illegal liquor bar issue; Priyanka Chaturvedi supports Smriti Irani's daughter: social media post
× RELATED சென்னையில் நாளை வாக்கு சேகரிக்கிறார் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி..!!