×

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை இடைப்பாடியில் 100 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

சேலம் : சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இடைப்பாடியில் 100 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். காடையாம்பட்டி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தார்.கேரளா, கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் எல்லையோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தற்போது, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் இடி, மின்னலுடன் மாநகர் பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்யத் தொடங்கியது. பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், குகை, 4 ரோடு, 5 ேராடு, அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால், கலெக்டர் அலுவலகம், காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாநகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

 இதேபோல், இடைப்பாடியில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் விடிய விடிய பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் மோட்டூர் காட்டுவளவு தோட்டம் கீச்சங்காடு, கள்ளப்பாளையம், குஞ்சாம்பாளையம், மூலப்பாதை, பில்லுக்குறிச்சி, காட்டூர், மலங்காடு, குரும்பப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பருத்தி, சோளத்தட்டு, ஆலை கரும்பு, எள்ளுச் செடி, நிலக்கடலை தண்ணீரில் மூழ்கியது. கள்ளப்பளையம் ஏரி, மாரனூர் ஏரி சுற்றியுள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பி தண்ணீர் வழிந்தோடியது. கவுண்டர்தோட்டம், செங்காடு காட்டுவளவு உள்ளிட்ட பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் ஆடு, கோழி மற்றும் கால்நடைகள் மூழ்கின. அப்பகுதி மக்கள் விடிய விடிய தூங்காமல் வீடுகளில் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

 கள்ளப்பாளையம், மாரனூர் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியதால் தாழ்வான பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. மூலப்பாதை நாச்சம்பட்டி ஏரி நிரம்பி அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. சுற்றியுள்ள நிலங்களில் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமானது. இதனிடையே மோட்டூர் கவுண்டர்தோட்டம் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கிருந்தவர்கள் வெளியேறி சந்தனமில் புறவழி சாலையில் இருந்து ஆவணியூர் செல்லும் புறவழி சாலையில் ஆடு, மாடு, கோழிகளை கட்டிலில் கட்டி நேற்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் சௌமியா, இடைப்பாடி நகர்மன்ற தலைவர் பாஷா, நகராட்சி ஆணையர் சசிகலா, ஆர்.ஐ. முருகேசன், விஏஓ பாபு மற்றும் இடைப்பாடி போலீசார் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அந்த பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல், காடையாம்பட்டி மற்றும் இடைப்பாடி, ஓமலூர், ஏற்காடு, சங்ககிரி, தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஏற்காட்டில் பெய்த மழையால், அதிகாலையில் கடும் குளிர் நிலவியது. மலைப்பாதையில் ஆங்காங்கே சிறிய அளவிலான மரங்கள் முறிந்து விழுந்தன. அதனை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக காடையாம்பட்டியில் 167 மி.மீ, குறைந்தபட்சமாக மேட்டூரில் 19 மி.மீ மழை பதிவாகி உள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:காடையாம்பட்டி 167, இடைப்பாடி 146, ஓமலூர் 122, சங்ககிரி 94, ஏற்காடு 78.2, தம்மம்பட்டி 75, ஆணைமடுவு 67, கரியகோவில் 62, சேலம் 61.5, பெத்தநாயக்கன்பாளையம் 42, ஆத்தூர் 37.4, கெங்கவல்ல 30, வீரகனூர் 26, மேட்டூர் 19 என மொத்தமாக 1027.1 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Tags : Salem: In Salem district, due to early morning rain, water has accumulated in low-lying places. In the interval
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...