×

சென்னையில் நாளை 2000 இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்: மேயர் பிரியா தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியக்கமாக நடத்தப்பட்டு, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் 31 கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 39,32,113 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 55,33,219 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 47,79,601 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் வரும் 24ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 32வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் (1 நிலையான முகாம் மற்றும் 9 நடமாடும் முகாம்கள்) என 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக ஒரு வார்டிற்கு 5 சுகாதாரக் குழுக்கள் வீதம் 200 வார்டுகளுக்கு 1000 சுகாதாரக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இந்த பணிகளில் மாநகராட்சி, காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் தெற்கு ரயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஈடுபட உள்ளனர். முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோயுடைய நபர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

தற்பொழுது, 75 நாட்களுக்கு அதாவது வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்த தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  இதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். சென்னையில் இதுவரை 47,77,906 பேர் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடைய நபர்களாக உள்ளனர்.  இவர்களில் 3,43,738 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 44,34,168 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. எனவே, தங்கள் பகுதிக்கு அருகாமையில் 24ம்தேதி நடைபெற உள்ள மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Corona Mega Vaccine ,Special Camp ,Chennai ,Mayor ,Priya , Vaccination Special Camp, Mayor Priya Information
× RELATED செட்டிகுளத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்