×

பூந்தமல்லி ஆர்டிஓ பரிசோதனை தளம் அருகே போக்குவரத்து நெரிசல் : பொதுமக்கள் அவதி

ஆவடி: பூந்தமல்லி ஆர்டிஓ பரிசோதனை தளம் அருகே போக்குவரத்து நெரிசல்  மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி பூந்தமல்லி, திருவேற்காடு, பட்டாபிராம், திருமுல்லைவாயில், திருநின்றவூர் ஆகிய பகுதிகள் வேகமாக வளர்ந்து வருகிறது. இதையொட்டி, தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களும் அதிகளவில் இயங்கி வருகின்றது. இதனால் ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் குடியேறுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.  இதனை கருத்தில் கொண்டு ஆவடி - பூந்தமல்லி பிரதான சாலையில் பருத்திப்பட்டு பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் புதிய கட்டிடத்தில் அமைக்கப்பட்டது.  

மேலும் ஆர்டிஓ வாகன பரிசோதனை தளம் வருபவர்கள், தங்களது வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால், ஆவடி - பூந்தமல்லி சாலையில் ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.  இதே போல்,அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் விரைந்து செல்வதிலும் சிரமம் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பூந்தமல்லி ஆர்டிஓ வாகன பரிசோதனை தளத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தங்களது புதிய பைக், கார், வேன் உள்பட பல்வேறு வாகனங்களை பதிவு செய்யவும், பழைய வாகனங்களுக்கு எப்சி காட்ட வருகின்றனர்.

இதனால் அரசுக்கு நேரடியாக பொதுமக்களிடம் இருந்து வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயை பெற்று கொள்ளும் அரசு, ஆர்டிஓ அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை மட்டும் செய்து தருவதே இல்லை. இதனால் ஆவடி - பூந்தமல்லி பிரதான சாலை பார்க்கிங் இடமாக மாறி வருகிறது.  தற்போது ஆவடி பிரதான சாலையில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடந்து வருகிறது. இதனால், சாலையில் ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்கின்றன. இந்தவேளையில், பூந்தமல்லி ஆர்டிஓ வாகன பரிசோதனை தளம் வரும் வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.   

அது மட்டுமின்றி  ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருவேற்காடு, மதுரவாயல், திருமழிசை ஆகிய பகுதிகளில் கழிவுநீர் வாகனம், தனியார் பேருந்து, ஆட்டோ கார் போன்ற வாகனங்கள் காலாவதி ஆகியும் சாலையில் செல்வதால் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மட்டுமல்லாமல் தனியார் டிப்பர் லாரிகள் அதிக அளவில் ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்தி வருகின்றனர். எனவே பூந்தமல்லி ஆர்டிஓ அலுவலகத்தில் முறையான வாகன நிறுத்துமிடம் அமைத்து, காலாவதி ஆன வாகனங்களை பறிமுதல் செய்து விபத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Poonthamalli ,RTO ,Awadi , Traffic congestion near Poontamalli RTO test site: Public suffering
× RELATED போனில் மனைவியுடன் தகராறு: கணவன் தூக்கிட்டு தற்கொலை