×

கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் குறைவாக உள்ளது..: அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை: கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் குறைவாக உள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று பெரம்பூரில் உள்ள துணை மின்நிலையத்தை ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம்கவி, இயக்குநர் மா.சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

ஆய்வுக்குப் பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த பகுதிகளில் கடந்த ஆண்டு பெய்த மழையினால் துணை மின் நிலையங்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் மின் மாற்றிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.  நாம் இப்போது அமர்ந்திருக்க கூடிய இந்த துணை மின் நிலையம் கடந்த ஆண்டு மழைக்காலத்தில் மிக மோசமான சூழ்நிலையில் மின் விநியோகம் செய்ய முடியாத அளவிற்கு இருந்தது. வரக்கூடிய மழைக்காலங்களில் எந்தவித பாதிப்புகளும் இல்லாத அளவிற்கு  சீரான மின் விநியோகம் பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் இந்த பி & சி துணை மின் நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த துணை மின் நிலையத்தில் இருந்து 27,000 மின் இணைப்பு தாரர்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத அளவிற்கு  துணைமின் நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.  கூடுதலாக, சட்டமன்ற உறுப்பினர் தாயகம்கவி வேண்டுகோளுக்கிணங்க இந்த தொகுதி மக்களுடைய கோரிக்கைகளின் அடிப்படையில் முதலமைச்சர் இந்த திரு.வி.க நகர் தொகுதிக்கு 110/33 கி.வோ. துணை மின் நிலையம் அமைப்பதற்கு ரூ.40 கோடி நிதியை ஒதுக்கி அதற்கான பணிகளை தொடங்குவதற்கான உத்தரவினை வழங்கியுள்ளார்கள்.  

இப்போது அந்த 110/33 கி.வோ துணை மின் நிலையம் அமைப்பதற்கான டென்டர் கோரப்பட்டிருக்கிறது தொடர்ந்து விரைவில் அந்தப் பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் இந்த திரு.வி.க நகர் பகுதியில் 10 RMUக்கள் (Ring main Unit) புதிதாக நிறுவப்பட்டுள்ளன. 14 புதிய விநியோகம் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன, 5 மின் மாற்றிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன, 52 பில்லர் பாக்ஸ்கள் ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளன.  

சென்னை மாநகர பகுதிகளைப் பொறுத்தவரைக்கும் இதுவரை 1,681 பில்லர் பாக்ஸ்கள் தரைமட்டத்திலிருந்து ஒரு மீட்டர் அளவிற்கு உயரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாமல் சீரான மின் விநியோகம் செய்வதற்கான முதலமைச்சர் உத்தரவின்படி வாரியத்தின் சார்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மின் வாரியத்தினுடைய நிலைமைகள் சீரழிந்ததற்கு காரணம் கடந்த ஆட்சியாளர்கள். குறிப்பாக கடந்த 10 வருடங்களில் மின்சாரத் துறைக்கு ஏற்பட்ட நிதி இழப்பு எவ்வளவு?  10 ஆண்டுகளில் மின்சார வாரியத்திற்கு கூடுதலாக ஏற்பட்ட  கடன் சுமை எவ்வளவு? 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் செலுத்தக்கூடிய வட்டி விகிதம் அதாவது ஒரு ஆண்டிற்கு எவ்வளவு உயர்ந்திருக்கிறது?  எதனால் அந்த வட்டி உயர்ந்தது? என்ன விலைக்கு கடந்த ஆட்சியில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது? எப்படி நிர்வாகம் செய்யப்பட்டது.

 ரூ.1,59,000 கோடி தமிழ்நாடு மின்சார வாரியத்தினுடைய கடன், இவ்வளவு கடன் வாங்கி கடந்த 10 ஆண்டுகளில் மின்சார வாரியத்தின் சொந்த உற்பத்தி நிறுவுதிறன் அதிகரிப்பட்டதா என்றால் இல்லை.  தனியாரிடம் கொள்முதல் செய்யப்பட்டது, தனியாரிடம் ஒப்பந்தங்கள் போடப்பட்டன ஆனால் வாரியத்தினுடைய சொந்த உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை. ரூ.1,59,000 கோடி கடன் கடந்த ஆட்சியினுடைய நிர்வாக கோளாறுகளின் காரணமாக ஏற்பட்ட கடன் சுமை குறிப்பாக, ஆண்டுக்கு ரூ.16,500 கோடி வட்டி கட்டுகிறோம் என்றால் அது யாரால் ஏற்பட்ட இழப்பு? எதனால் வந்த வட்டி? கடந்த அதிமுக ஆட்சியில் மின் கட்டணமே உயர்த்தப்படவில்லை என்று கூறியுள்ளார்கள் கடந்த 2012, 2013, 2014ல் தொடர்ந்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.  

குறிப்பாக 37 விழுக்காடு அளவிற்கு ஒரே ஆண்டில் மின் கட்டணத்தை உயர்தியது கடந்த அதிமுக அரசு.  இதையெல்லாம் மறைத்து, மறந்து உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடுகிறார்கள். இந்த மின் கட்டணத்துடைய உயர்வை பொறுத்தவரைக்கும் எந்தளவிற்கு ஒன்றிய அரசு அழுத்தம் கொடுத்திருக்கிறது, எந்த அளவிற்கு கடிதங்களை அனுப்பி 28 முறை ஒன்றிய அரசு REC, CFC நிதி நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளன.  

வங்கிகள் கடன் வழங்க முடியாத அளவிற்கு ஒரு சூழ்நிலையை உருவாக்கி கண்டிப்பாக மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள். மின் கட்டண உயர்வைப் பொறுத்தவரை பொது மக்களுக்கு, அதாவது அடித்தட்டு மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. வீடு மற்றும் குடிசை பயன்பாட்டுவாசிகள் மொத்தம் 2.37 கோடி பேர் உள்ளனர். அதில் ஒரு கோடி பேருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.  கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேடு மற்றும் ஒன்றிய அரசின் காரணமாக தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  எந்தவிதத்திலும் அடிதட்டு மக்களுக்கு பாதிப்பு இல்லை.

கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் குறைவு. ஆனால் அங்கெல்லாம் மின் கட்டணம் அதிகமாக உள்ளது ஆனால் அங்கெல்லாம் போராட்டங்கள் நடத்தப்படுவதில்லை.  தமிழ்நாட்டில் தான் போராட்டங்களை அறிவித்துள்ளார்கள்.  இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மின் கட்டணம் குறைவாக உள்ளது. ஏன் கேஸ் விலை, பெட்ரோல் விலை, டீசல் விலை உயர்வுகளை குறித்து போராட்டம் நடத்தவில்லை?  2014ல் 410 ரூபாய் இருந்த கேஸ் விலை இன்றைக்கு 1,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது, 72 ரூபாய் இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 102 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

டீசலைப் பொறுத்தவரை லிட்டர் 54 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று 94 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஏன் இவைகளை கண்டித்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தவில்லை?  உண்மையாகவே மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள்,  விலைவாசி  உயர்வைக் குறித்து போராட்டங்களை நடத்தி மக்களுக்கு நன்மை செய்யட்டும். கடந்த 10 ஆண்டுகளில் நிர்வாக சீர்கேட்டினை மேம்படுத்த எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.   

சொந்த மின் உற்பத்தி செய்வதற்கான எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.  2006-2011 காலங்களில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் முடிவு பெறாததால்,   ஏற்பட்ட கூடுதல் வட்டி செலவு மட்டும் ரூபாய் 12,600 கோடி. தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் மின் இணைப்பு வழங்கப்படும், இதுவரை ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு விவசாய மின் இணைப்பு  வழங்கப்பட்டுவிட்டது.  

இந்த வருடம் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன  அடுத்த வாக்குறுதி நிலைக்கட்டணம் இரத்து செய்யப்படும் என்பது, வாக்குறுதியின்படி நிலைக்கட்டணம் இந்த மின் கட்டண மாற்றத்தின் மூலமாக இரத்து செய்யப்பட உள்ளது.  அடுத்து மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கெடுப்பது.  தற்போது வீடுகளில் மின்சார அளவு கணக்கெடுக்கும் பணி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை செய்யப்படுகிறது. மாதம் மாதம் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளும்போது பணியாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்.  

சட்டமன்றத்தில் மின் மாற்றிகளுக்கு மீட்டர் பொருத்தப்படுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.  இப்போது டிபிஆர் முடிவுற்று டென்டர் நிலைக்கு வந்துள்ளது.  ஸ்மார்ட் மீட்டர் வீடுகளுக்கு பொருத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கான பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதந்தோறும் கணக்கீடு மேற்கொள்ளும் பணி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி செயல்படுத்தப்படும்.

வாரியத்தை மேம்படுத்துதல், தரமான மின்சாரம் , தடையில்லா மின்சாரம், மின் உற்பத்தி சொந்தமாக அதிகரிக்க வேண்டும், கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு வருடத்தில் 316 துணை மின்நிலையங்கள் நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இவ்வாறு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,Karnataka ,Gujarat ,Minister ,Senthilbalaji , Electricity charges in Tamil Nadu are lower than Karnataka and Gujarat states..: Minister Senthilbalaji
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...