×

கொலை திட்டத்துக்கு ஒத்துழைக்காததால் நண்பனின் வீடு உள்பட 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கைது: புளியந்தோப்பில் பரபரப்பு

சென்னை: சென்னை புளியந்தோப்பு, வாசுகி நகர், 2வது குறுக்கு தெருவில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மர்ம நபர் ஒருவர், வீட்டின் வெளியே அமர்ந்திருந்த சீனிவாசன் (80) என்பவரது வீட்டு வாசலில் பெட்ரோல் வெடிகுண்டு வீசினார். அது, பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. சத்தம் மற்றும் எரிந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர். அப்போது, அந்த மர்ம நபர், ‘உனது மகன் வந்தால் மணி வந்துட்டு போனேன்,’’ என சொல்லு என சினிமா பாணியில் கூறிவிட்டு சென்றார். இதுபற்றி அக்கம் பக்கத்தினர் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், புளியந்தோப்பு காந்தி நகர் 6வது தெருவை சேர்ந்த விமல் (எ) சிங்கம் விமல் (30) வீட்டிலும் அதே நபர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். அது, வெடிக்காமல் லேசாக தீ பற்றியது. அதனையும் அக்கம் பக்கத்தினர் அணைத்தனர். பின்னர் இதுகுறித்து பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். பின்னர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் அழகேசன் விசாரணை மேற்கொண்டார். அதில், திரு.வி.க நகர் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் ரவுடி மணி (எ) குள்ள மணி (28), இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இவர், கடந்த 3 நாட்களுக்கு முன் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இவரது மாமா அப்பு (எ) தினேஷை கடந்த 2017ம் ஆண்டு ஓட்டேரியில் வைத்து கதிரவன் தலைமையிலான கும்பல் வெட்டி கொலை செய்தது. அதற்கு பழிக்குப் பழியாக எதிர்தரப்பினரை கொலை செய்ய குள்ளமணி திட்டமிட்டுள்ளார். இதற்காக, தனது நண்பரான புளியந்தோப்பு காந்தி நகரை சேர்ந்த விமலை அழைத்துள்ளார். அதற்கு விமல், நான் வரவில்லை, எனக்கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குள்ளமணி, விமல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.

இதேபோல், புளியந்தோப்பு வாசுகி நகரில் செல்வம் என்பவர் குள்ள மணிக்கு மிகவும் நெருக்கமாக செயல்பட்டதாகவும், செல்வத்திற்கு எதிராக மாரி (எ) லோடாங்கு மாரி என்பவர் செயல்பட்டு வந்ததாகவும், அவரை மிரட்டுவதற்காக, அவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதும் தெரிய வந்தது. மேலும், குள்ள மணியுடன் வந்த மற்றொரு நபர் புழல் மணிகண்டபுரம் பகுதியை சேர்ந்த சூர்யா என்பதும் தெரிய வந்தது. குள்ளமணி மீது திரு.வி.க நகர், மாதவரம், பெரவள்ளூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

ஏற்கனவே இவர் இரண்டு முறை பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புளியந்தோப்பு பகுதியில் ஏற்கனவே அப்பு என்ற ரவுடி கும்பலுக்கும், கதிரவன் என்கின்ற ரவுடி கும்பலுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில் அப்பு தரப்பில் இதுவரை 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கதிரவன் தரப்பில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த குள்ளமணி, அப்பு தரப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Puliantop , A rowdy who hurled petrol bombs at 2 places including a friend's house for not cooperating with the murder plan, arrested: stir in Pulianthop
× RELATED ராயப்பேட்டையில் ரவுடி ஆற்காடு சுரேஷின் கூட்டாளி வெட்டிக் கொலை!