டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா காந்தி ஆஜர்: மோடி அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக 12 எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

டெல்லி: டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜரானார். நேஷனல் ஹெரால்டு முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை ஏற்கனவே பல நாட்கள் தொடர்ச்சியாக விசாரணை நடத்தியது. இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் சோனியா மட்டும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில், அவர் தொற்றில் இருந்து குணமான நிலையில், 21ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை ஏற்கனவே சம்மன் அனுப்பி இருக்கிறது.

அதன்படி, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோனியா காந்தி இன்று ஆஜரானார். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் உடன் சென்றனர். சோனியா காந்தி விசாரணக்கு அழைக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் போராட்டத்தை அடுத்து அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக நாடாளுமன்றத்தை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதனிடையே சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மோடி அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக 12 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: