×

ஹெராயின் வழக்கு: தமிழகத்தின் 25 இடங்களில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் 57 செல்போன்கள் பறிமுதல்

சென்னை: சென்னை, திருச்சி உட்பட 25 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனையில் 57 செல்போன்கள், 2 பென்டிரைவ், 1 ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இன்று காலை முதல் தமிழகத்தின் 3 முக்கிய மாவட்டங்களான சென்னை, திருச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். கடந்த ஆண்டு மார்ச் 21ம் தேதி, கேரள கடலோர பகுதியான விழிஞ்சம் என்ற பகுதியில், இலங்கை படகு ஒன்றை கடலோர காவல்படையினர் கைப்பற்றினர். அதில், 300 கிலோ ஹெராயின், ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் 1000 தோட்டாக்கள்  இருப்பதை கண்டு, அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் அப்படகில் பயணம் செய்த 6 பேரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, கைப்பற்றப்பட்ட படகில் ஆயுதம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட காரணத்தினாலும், வெளிநாட்டு தொடர்புடைய கப்பலில் இருந்து இவையனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதாலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த மே மாதம் வழக்கை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கு விவகாரத்தில் ஏற்கெனவே சுரேஷ்- சௌந்தர்ராஜன் என்ற 2 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் இலங்கை தமிழர் சற்குணம் என்ற நபரும் கைது செய்யப்பட்டார். இவர் விடுதலை புலிகள் இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் உள்ளிட்ட சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், ஈரானில் இருந்து தான் இந்த போதை பொருட்களெல்லாம் தமிழகத்திற்கு, குறிப்பாக இந்தியாவிற்குள் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாலும் மீண்டும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் 25 இடங்களில் சோதனை நடத்தினர். அதனடிப்படையில், சென்னையில் 10 இடங்களிலும், திருச்சியில் 10 இடங்களிலும், திருப்பூரில் 1 இடத்திலும், மற்றும் சில இடங்களிலும் என மொத்தம் 25 இடங்களில் சோதனை நடைபெற்றது. சுமார் 8 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோதனையின் முடிவில், 57 செல்போன்கள், 68 சிம் கார்டுகள், 2 பென்டிரைவ்கள், 1 ஹார்ட் டிஸ்க், 2 லேப்டாப் மற்றும் 8 வைஃபை மோடம்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாகவும், ரொக்க பணப்பரிவர்த்தனை ஆவணங்கள், இலங்கை பாஸ்போர்ட், சில தங்க ஆபரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் ஆவணங்கள் மூலம் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது? வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கு நிதி திரட்ட இவர்கள் உதவியுள்ளனரா? எந்தெந்த அடிப்படையில் இவர்கள் உதவியுள்ளனர்? என்பது கைப்பற்றப்பட்ட எலக்ட்ரானிக் ஆவணங்களை ஆய்வு செய்த பின்பே தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Tags : NIA ,Tamil Nadu , Heroin, Tamil Nadu, 25 locations, NIA raid, 57 cell phones, seized
× RELATED தமிழ்நாடு பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மாநில தலைவர் அண்ணாமலை!