×

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய டேவீஸ் பூங்கா-ஊட்டி நகராட்சி மீது மக்கள் அதிருப்தி

ஊட்டி : ஊட்டி நகராட்சியில் ஆங்கிலேயர் கால பழமையான டேவிஸ் பூங்கா பராமரிப்பின்றி கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் அதிக பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக, ஊட்டி நகரில் பல்வேறு பகுதிகளிலும் சிறிய பூங்காக்கள் முதல் பெரிய பூங்காக்கள் வரை ஏற்படுத்தப்பட்டன.

இவை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்  முறையாக பராமரிக்கப்பட்டும் வந்தது. அதன்பின், இந்த பூங்காக்களை ஒரு சில பகுதிகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே பராமரித்து வந்தாலும், பெரும்பாலான பகுதிகளில் பராமரிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். குறிப்பாக, ஊட்டி நகரில் பல்வேறு பகுதிகளிலும் இருந்த பூங்காக்கள் புதர்மண்டி காட்சியளித்தன.

பல ஆண்டுகளாக ஊட்டி நகரில் பராமரிப்பின்றி கிடந்த சிறிய பூங்காக்கள் அனைத்தையும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஊட்டி நகராட்சி நிர்வாகம் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டன. நகராட்சிக்கு உட்பட்ட 5க்கும் மேற்பட்ட பூங்காக்கள் புனரமைக்கப்பட்டு, அவை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டன. ஆனால், தொடர்ந்து அந்த பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. பெரும்பாலான பூங்காக்கள் தற்போது சமூக வீரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதில், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அதிகளவு செல்லும் பூங்காவாக கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள டேவீஸ் பூங்கா திகழ்ந்து வந்தது.

இப்பூங்கா சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் அதிகாலை நேரங்களில் நடைபயணம் மேற்கொள்ள பயன்படுத்தி வந்தனர். சுற்றுலா பயணிகள் பலரும் இங்கு ஓய்வு எடுப்பது, உணவு உட்கொள்வதற்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இப்பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும், இதற்கு அதிகாரிகள் அலட்சியப்போக்கே காரணம் எனவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊட்டி டேவீஸ் பூங்காவில் புதர் செடிகள் வளர்ந்து மண்டி காணப்படுகின்றன். மேலும், போதிய பராமரிப்பு இல்லாததால் நடைபாதைகள் முழுமையாக பழுதடைந்துவிட்டன. அங்கிருந்த செயற்கை நீர் ஊற்று செயல்படாமல் முடங்கிப்போயுள்ளது.

வேலிகள் மற்றும் சுற்றுச்சுவர் இல்லாத நிலையில், கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக டேவீஸ் பூங்கா மாறி அவல நிலையில் காட்சியளிக்கிறது. மேலும், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் மீண்டும் இப்பூங்காவை சீரமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gark ,Davies , Ooty: In Ooty Municipality, the old English-era Davis Park is an unmaintained cattle grazing ground and a social
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்