×

சென்னை விமான நிலையத்தில் போதிய அலுவலர்கள் இல்லாததால் மூடி கிடக்கும் குடியுரிமை கவுன்டர்கள்: பயணிகள் தவிப்பு

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவில் போதிய அலுவலர்கள் இல்லாததால் கவுன்டர்கள் மூடிக்கிடக்கிறது. இதனால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்வுக்குப் பிறகு, சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்திற்கு, விமான சேவைகள் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது நாளொன்றுக்கு 42க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னைக்கு வந்து செல்கின்றன. அதில், 31 விமானங்கள் இரவு நேர விமானங்கள். இதனால் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. அத்தகைய பயணிகளை பரிசோதிக்க 56 குடியுரிமை கவுன்டர்கள் உள்ளன.

அதில், புறப்பாடு பகுதியில் 22 கவுன்டர்கள், வருகை பகுதியில் 34 கவுன்டர்கள் அமைந்துள்ளன. ஆனால் பெரும்பாலான கவுன்டர்களில் குடியுரிமை அலுவலர்கள் இருப்பதில்லை. அதனால் மூடியே கிடக்கிறது. திறந்திருக்கும் சில கவுன்டர்களில் உள்ள குடியுரிமை பிரிவில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் பயணிகள் சோதனை முடிந்து வெளியே வர இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாகிறது. இதனால், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், ஒரே நேரத்தில் அதிகமான பயணிகள் கூட்டம் இருப்பதால், அப்பகுதியில் உள்ள ஏ.சி.கள் செயலிழந்து, புழுக்கத்தில் தவிக்கின்றனர். சில பயணிகள் மயங்கி விழும் சூழ்நிலையும் உள்ளது. சமூக இடைவெளியும் கடைபிடிப்பதில்லை.

இதுபற்றி, விமான நிலைய அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்த போது, ‘சென்னை விமான நிலையம், இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. ஆனால் குடியுரிமை பிரிவு, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் உள்ளது. எனவே உள்துறை அமைச்சகம் தான் குடியுரிமை பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். இது சம்பந்தமாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் உள்துறை அமைச்சகம் இதுவரையில் குடியுரிமை அதிகாரிகளை நியமிக்கப்படவில்லை.

அதனால்தான் முழு அளவிலான கவுன்டர்கள் செயல்பட முடியவில்லை. தற்போது சுமார் 45க்கும் மேற்பட்ட குடியுரிமை அலுவலர்கள் சென்னை விமான நிலையத்திற்கு புதிதாக பணி அமர்த்தப்பட இருக்கின்றனர். அவர்கள் வந்தால், பிரச்னை தீர்ந்துவிடும்,’ என்றனர். இதே பதிலை கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக அதிகாரிகள் கூறி வருகின்றனர். எனவே, இப்பிரச்னைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Chennai airport , Citizenship counters remain closed at Chennai airport due to lack of staff: Passengers suffer
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்