×

பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட 5 பேர் சேலம் சிறையில் அடைப்பு

சேலம்: சின்னசேலம் தனியார் பள்ளி விடுதியில் மாணவி இறந்த விவகாரத்தில் கைதான பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட 5 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில், கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா பெரிய நெசலூரை சேர்ந்த ஸ்ரீமதி(17) என்ற மாணவி, விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்தார். கடந்த 13ம் தேதி அதிகாலை மாணவி ஸ்ரீமதி, விடுதியின் 3வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவி சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

 இதனிடையே, கடந்த 17ம்தேதி இளைஞர்கள், மாணவர் அமைப்பினர் உள்ளிட்டோர் பள்ளி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் தடுப்புகளை மீறி உள்ளே புகுந்த போராட்டக்காரர்கள், பள்ளியை சூறையாடினர். பஸ்களுக்கு தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்களால் ரூ5 கோடி மதிப்பிலான  பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

இந்நிலையில், மாணவி சாவு விவகாரத்தில், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார்(48), அவரது மனைவியும், செயலாளருமான சாந்தி(44), பள்ளி முதல்வர் சிவசங்கரன்(58) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், மாணவி எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா(40), கணித ஆசிரியை கீர்த்திகா(28) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்களை கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், நேற்று முன்தினம் இரவு தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரனை சேலம் மத்திய சிறையிலும், பள்ளி செயலாளர் சாந்தி, ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோரை சேலம் பெண்கள் கிளை சிறையிலும் அடைத்தனர்.

Tags : Salem Jail , School Principal, Principal, Imprisonment in Salem Jail
× RELATED சேலம் சிறையில் டிஐஜி ஆய்வு