×

உத்திரமேரூர் அருகே திரிசூலக்காளியம்மன் கோயில் 38ம் ஆண்டு தீமிதி திருவிழா

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரிசூலகாளியம்மன் ஆலய 38ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன், பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் உலக நன்மை வேண்டி யாக வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நடந்த திருவிளக்கு பூஜையில் 1008 பெண்கள் பங்கேற்றனர். இதில், மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கவும், மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காகவும் கலந்து கொண்டனர்.

மதியம், பக்தர்கள் வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை சுற்றிவந்து அம்மனை வழிபட்டும், கோயில் வளாகத்தில் ஊரணி பொங்கல் வைத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. மாலையில், விரதமிருந்த பக்தர்கள் திருப்புலிவனம் குளக்கரையில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீகுண்டத்தில் தீமிதித்து அம்மனை வழிபட்டனர். கோயில் வளாகத்தில் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. பக்தர்களுக்கு அறுசுவையுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அலங்கரிக்கப்பட்ட திரிசூலகாளியம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.



Tags : Trichulakaliyamman Temple ,Uttramerur ,Themiti festival , Trishulakkaliyamman temple near Uttaramerur 38th Dimithi Festival
× RELATED பல ஆண்டுகளாக தொடரும் இருதரப்பு...