×

ஊட்டியில் தாட்கோ கடன் வழங்க ரூ10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கணக்காளருக்கு 5 ஆண்டு சிறை: புரோக்கருக்கு 3 ஆண்டு தண்டனை

ஊட்டி: தாட்கோ மூலம் கடன் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கணக்காளர் மற்றும் புரோக்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.ஊட்டி அருகேயுள்ள காத்தாடிமட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கடந்த 2016ம் ஆண்டு தாட்கோ மூலம் வாடகை கார் வாங்க விண்ணப்பித்தார். இவருக்கு, கடன் வாங்கித்தருவதாக புரோக்கர் செல்வராஜ் செயல்பட்டு வந்தார். சுரேஷ்க்கு கடன் வழங்க தாட்கோ அலுவலகத்தில் கணக்காளராக இருந்த பிரபாகரன் என்பவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விருப்பாத சுரேஷ் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அவர்கள் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூபாய்நோட்டுக்கள் கொடுக்கப்பட்டது. அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை கையும், களவுமாக பிடித்தனர். கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கார் வாங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் முதலில் புரோக்கர் செல்வராஜை கைது செய்தனர். தொடர்ந்து, கணக்காளர் பிரபாகரனையும் கைது செய்தனர்.

இவ்வழக்கு ஊட்டியில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஸ்ரீதர் விசாரித்து வந்தார். குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், கணக்காளர் பிரபாகரனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், புரோக்கராக செயல்பட்ட செல்வராஜ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Tatco ,Ooty , Accountant gets 5 years in jail for taking Rs 10,000 bribe to grant Tatco loan in Ooty: Broker gets 3 years
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...