×

திருவொற்றியூரில் அடிப்படை வசதிகளின்றி இடிந்து விழும் கட்டிடத்தில் அரசு கல்லூரி

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கும் அரசு கல்லூரியில் அடிப்படை வசதி இல்லாததால் மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகின்றனர். திருவொற்றியூர் பூந்தோட்ட தெருவில் உள்ள சென்னை பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் (உறுப்பு) கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணினி பயன்பாட்டியல், வணிகவியல், வணிகவியல் கணினி பயன்பாட்டியல் ஆகிய 5 பாடப்பிரிவுகளில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இங்கு 800 மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். கல்லூரி முதல்வர், மற்றும் 30 பேராசிரியர்கள், 4 தற்காலிக அலுவலர்கள் என சுமார் 35 பேர் இந்த கல்லூரியில் பணியாற்றுகின்றனர். கடந்த திமுக ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் மறைந்த கே.பி.பி.சாமி திருவொற்றியூரில் அரசு கல்லூரி துவக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்தார். அதன்பேரில், இதற்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 11.8.2012ம் ஆண்டு பூந்தோட்ட தெருவில் இயங்கி வந்த ஆரம்ப பள்ளியில் தற்காலிகமாக கல்லூரி தொடங்கப்பட்டது. இங்கு ஏற்கனவே படித்து வந்த ஆரம்பப் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள வேறு ஒரு கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த கட்டிடத்தில் மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமானதாக வகுப்பறை இல்லாததால், 2 ஷிப்ட்களாக நெருக்கடியில் மாணவ, மாணவியர் பயில வேண்டிய அவல நிலை உள்ளது. இந்த கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று பெற்றோர்களும், மாணவ, மாணவர்களும் கடந்த அதிமுக ஆட்சியில் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் கல்லூரி உள்ள பூந்தோட்ட தெருவிலேயே கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்தப் பணி நடைபெறவில்லை. தற்போது இந்த கல்லூரி கட்டிடம் பழுதடைந்து ஆங்காங்கே லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் மழை பெய்தால் வகுப்பறையில் தண்ணீர் கசிவதால் மாணவ, மாணவியர் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், மழைநீர் கசிவதால் வகுப்பறை சுவர் ஈரமாகி மின்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதுடன், எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் மழைக்காலத்தில் கல்லூரிக்கு விடுமுறை விட வேண்டிய நிலை உள்ளது. வகுப்பறைக்குள் மழைநீர் கசிவதால் மாணவ, மாணவியர் பயன்படுத்தி வரும் கம்ப்யூட்டர்கள் பழுதாகி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

80 சதவீதம் பெண்களும், 20 சதவீதம் ஆண்களும் பயிலும் இந்த கல்லூரியில் பெண்களுக்கு என்று தனியான கழிப்பிடம் இல்லை. பொதுக் கழிப்பிடத்தையே மாணவ, மாணவியர் பயன்படுத்தி வரும் அவலமும் உள்ளது. தற்போது மழைக்காலம் துவங்க உள்ளதால் எந்த நேரத்திலும் வகுப்பறை இடிந்து விழுந்து விடுமோ என்ற பீதியில் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர். எனவே, இந்த கல்லூரிக்கு மாற்று இடத்தில் புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ‘‘தற்காலிகமாக இந்த கட்டிடத்தில் கல்லூரி இயங்கும், விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று கடந்த அதிமுக ஆட்சியில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கட்டப்படவில்லை. மேலும், போதிய வகுப்பறை வசதி இல்லாததால் இதுவரை அறிவியல் தொடர்பான வகுப்பு துவக்கப்படாமலேயே உள்ளது. இந்த கட்டிடம் பாதுகாப்பாக இல்லை என்பதால் மாநகராட்சி இந்த கல்லூரியை காலி செய்ய வேண்டும், என்று நோட்டீஸ் விடுத்துள்ளது. சிறப்பான கல்வி பயிற்சி அளித்தும் போதுமான இடவசதி இல்லாததால் இந்த கல்லூரியில் சேர்வதற்கு மாணவ, மாணவியர்கள் தயங்குகின்றனர். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

*கிடப்பில் கோப்புகள்
திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே உள்ள ரீட் கூட்டுறவுக்கு சொந்தமான இடத்தில் அரசு கல்லூரிக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்து, அதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து துறை ரீதியான ஆவண நகர்வுக்காக திட்ட வரவு தயாரிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதன் கோப்புகள் மீது எந்த நடவடிக்கை எடுக்காமல் குரளகத்தில் உள்ள ரீட் கூட்டுறவு அலுவலகத்தில் கிடப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கே.பி.சங்கர் எம்எல்ஏ சட்டமன்றத்திலும் கோரிக்கை வைத்துள்ளார். எனவே கல்வித்துறை மற்றும் ரீட் கூட்டுறவு அதிகாரிகள் ஒன்றிணைந்து இந்த கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Thiruvottiyur , A government college in a dilapidated building without basic amenities in Thiruvottiyur
× RELATED திருவொற்றியூரில் பெண்ணை முட்டிய...