×

செல்பி புள்ள.. நேப்பியர்.. நேப்பியர்..!

சென்னை: ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் நேப்பியர் பாலம் செஸ் களமாய் தத்ரூபமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கு குடும்பம் குடும்பமாக வந்து பொதுமக்கள் செல்பி எடுத்து கொண்டனர். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச சதுரங்கப் போட்டி வருகிற 28ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில், 187 நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் நடத்தப்படும் இந்த சர்வதேச சதுரங்க போட்டியை பிரமாண்டமாக நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இப்போட்டிக்கான தொடக்க விழா மிகப் பிரமாண்டமாக சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 28ம் தேதி மாலை நடைபெற உள்ளது. இந்த தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த வாரம் டெல்லி செல்வதாக இருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவரால் டெல்லி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தொடக்க விழாவில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலாளர் இறையன்பு நாளை டெல்லி செல்ல உள்ளனர்.

அதே நேரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால், அதனை வரவேற்கும் வகையில் தமிழகமே விழாக்கோலம் பூண்ட தொடங்கியுள்ளது. சென்னை முழுவதும் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களாக காட்சியளிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை நேப்பியர் பாலம் முழுவதும் செஸ் போட்டியை நினைவு கூறும் வகையில் கறுப்பு, வெள்ளை போர்டாக மாற்றப்பட்டுள்ளது. பாலத்தின் தூண்கள் மற்றும் பாலத்தின் தரைத்தளம் முழுவதும் கறுப்பு, வெள்ளை என்று செஸ் போர்டு மாதிரி தத்துரூபமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த பாலத்தில் பயணம் செய்பவர்கள் வாகனங்களை நிறுத்தி தத்ரூவமாக அமைக்கப்பட்டுள்ள இந்த காட்சியை செல்பி மூலம் படம் பிடித்து செல்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை மெரினாவுக்கு வந்தவர்கள் அனைவரும் நேப்பியர் பாலம் நோக்கி படையெடுக்க தொடங்கினர். அவர்கள் செஸ் களமாய் ஜொலிக்கும் நேப்பியார் பாலத்தில் நின்று செல்போன் மூலம் குரூப் போட்டோ எடுத்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அங்குலம் அங்குலமாக நின்று வித, விதமான போட்டோக்களையும் அவர்கள் எடுத்து கொண்டனர்.

Tags : Selby Bulla ,Napier , Selby Bulla.. Napier.. Napier..!
× RELATED சென்னை நேப்பியர் பாலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து