×

துணை கலெக்டர், துணை காவல் கண்காணிப்பாளர் பதவிக்கான குரூப் 1 இறுதி தேர்வு முடிவு வெளியீடு: முதலிடம் பிடித்தார் செங்கல்பட்டு மாணவி லாவண்யா

சென்னை: துணை கலெக்டர், துணை காவல் கண்காணிப்பாளர் பதவியில் காலியாக உள்ள 66 பதவிகளுக்கு நடத்தப்பட்ட குரூப் 1 இறுதி தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் முதல் இடத்தை செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற மாணவி பிடித்துள்ளார். அதிக இடங்களை பெண்கள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) துணை ஆட்சியர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்-19, வணிகவரித்துறை உதவி ஆணையர்-10, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 14, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்-4, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் அடங்கிய 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2020 ஜனவரி 20ம் தேதி வெளியிட்டது.

முதல்நிலை தேர்வு கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்டு,  2021 ஜனவரி 3ம் தேதி நடத்தப்பட்டது. தொடர்ந்து அதே ஆண்டு டிசம்பர் 14ம் தேதி முதல்நிலை தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக 3,800 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த மார்ச் மாதம் 4, 5 மற்றும் 6ம் தேதிகளில் நடந்தது. தொடர்ந்து, மெயின் தேர்வு ரிசல்ட் கடந்த 29ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 137 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு கடந்த 13, 14, 15ம் தேதி (நேற்று) நடந்தது. நேர்காணல் முடிந்ததை அடுத்து இறுதி தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இதில் அதிக அளவிலான இடங்களை பெண்களே கைப்பற்றி, ஆண்களை பின்னடைய செய்துள்ளனர்.

இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: நேர்முக தேர்வு மற்றும் மெயின் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இறுதி தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்த 36 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழக அளவில் மொத்த தேர்ச்சி விகிதத்தில் 50 சதவீதத்திற்கும் மேலாகும்.

இந்த தேர்வில் லாவண்யா என்ற மாணவி தமிழக அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். சத்யா நந்தினி என்ற மாணவி 2ம் இடத்தையும், காயத்ரி என்ற மாணவி 3ம் இடத்தையும், சுப்புலட்சுமி என்ற மாணவி 4ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்தவர்கள். முதல் 10 இடங்களில் 6 பேர் எங்களிடம் படித்தவர்கள். 3ம் இடத்தை பிடித்துள்ள காயத்ரி என்ற மாணவி முதன்மை தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றவர். முகமது பைசல் என்ற மாணவன் (பிசிஎம்) பிரிவில் தமிழக அளவில் முதலாம் இடத்தையும், கலிதா ஜியா என்ற மாணவி இதே பிரிவில் 2ம் இடத்தையும் பிடித்துள்ளார். இவர்களும் எங்கள் மையத்தில் படித்தவர்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.

முதல் இடத்தை பிடித்த மாணவி லாவண்யா செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர். சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் கடந்த முறை நடந்த குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று கோடம்பாக்கத்தில் சப்-ரிஜிஸ்திராராக பணியாற்றி வருகிறார். இந்த முறை குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு துணை கலெக்டர் பதவி கிடைக்கும். இதேபோல 66 இடங்களில் பெரும்பாலான இடங்களை பெண்களே கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Deputy Superintendent ,Chengalpattu ,Lavanya , Deputy Collector, Deputy Superintendent of Police, Group 1 Final Exam,
× RELATED செங்கல்பட்டில் கொலை செய்ய திட்டம்...