×

ஒகேனக்கல்லில் 1.20 லட்சம் கனஅடி நீர்வரத்து முழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை: காவிரி கரையோரங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1,13,513 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், இன்று இரவு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் மழை வலுத்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

இரு அணைகளிலிருந்தும் நேற்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 1.13 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால்,  தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முற்பகல் 1 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நண்பகலில் 1.20 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிப்பதற்கும், பரிசல் சவாரி செய்வதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை 82,642 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நண்பகல் 1,08,538 கனஅடியாகவும், மாலை 4 மணியளவில் 1,13,513 கனஅடியாகவும் அதிகரித்தது. நேற்று முன்தினம் 110 அடியாக இருந்த நீர்மட்டம், படிப்படியாக அதிகரித்து நேற்று பிற்பகல் 116 அடியானது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்று இரவுக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டும் பட்சத்தில் அணைக்கு வரும் நீர் அனைத்தும் காவிரியில் திறந்துவிடப்படும் என்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags : Okanagan ,Cauvery , Okanagan, Neevarathu, Mettur Dam, Cauvery, flood warning
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி