×

முழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை; ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் மழை வலுத்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து  உபரி நீர் திறப்பு மீண்டும் 1 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒகேனக்கல் காவிரியில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 1லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிப்பதற்கும், பரிசல் சவாரி செய்வதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை 85,129 கனஅடியாக இருந்த நீர்வரத்து மதியம் 77,807 கனஅடியாக சரிந்தது. மாலை 4 மணி நிலவரப்படி 73,029 கனஅடியாக இருந்த நிலையில் இரவு 8 மணிக்கு அணைக்கு விநாடிக்கு 74,588 கனஅடியாக சற்று அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 82,642கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 20ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 110.14 அடியாக இருந்த நிலையில் மதியம் 110.77 அடியாகவும், மாலை 4 மணி நிலவரப்படி 111.30 அடியாகவும் உயர்ந்தது. இரவு 8 மணி நிலவரப்படி 112 அடியாக அதிகரித்தது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 113.96 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 84.16டிஎம்சியாக உள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாளை இரவுக்குள் மேட்டூர் அணை முழு கொள்ளளவை (120) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக சரிந்த நிலையில் பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் நடப்பு நீர் பாசன ஆண்டில் காவிரி டெல்டா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் மேட்டூர் நீர் தேக்கத்தில் மீன்வளம் பெருகும் என்று மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு திடீரென அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாலும் மேட்டூர் அணையில் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத்துறை அதிகாரிகளும் பணியாளர்களும் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Mettur Dam ,Okanagan , Mettur Dam reaches full capacity; Water flow in Okanagan increased to 1 lakh cubic feet
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு