×

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு விவகாரம்; ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான விவகாரத்தில் முன்னதாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாகவும், இந்த வீடுகளை அகற்றும்படியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரிப்பு வீடுகளை அகற்ற கடந்த 2015, 2017ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முயன்றபோது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை என சேகர் என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டு, மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகிரமிக்கப்பட்ட குடியிருப்பு கட்டடங்களை பொறுத்தவரை, தமிழக அரசால் அவர்களுக்கு மாற்று தேர்வு செய்யப்பட்டு அதில் வீடுகளை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும், பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு இடத்தில் குடியிருப்பவர்களுக்கு என்று ₹38 கோடி மதிப்பீட்டு செலவில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 926 பேருக்கு வீடுகள் தயாராகவும், 510 பேருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் வீடுகள் ஒதுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் வாதங்களோடு கூடிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இதனை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்த நீதிமன்றம், அரசு தரப்பு அறிக்கையை அனைத்து மனுதாரரர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றும், அதற்கு அவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தது.
இதே விவகாரத்தில் தங்களையும் மனுதாரர்கள் இணைத்து விசாரிக்க வேண்டும் எனக்கோரி பெத்தேல் நகர் குடியிருப்போர் சங்கத்தை சார்ந்தவர்கள் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக இடையீட்டு மனுதாரர்களான பெத்தேல் நகரை சேர்ந்த அருள் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  

அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் வாதத்தில், ‘‘பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு விவகாரத்தை பொருத்தவரையில் பாதிக்கப்பட்டவர்களின் எந்தவித கருத்துக்களையோ அல்லது நியாயத்தையோ கேட்காமல் உயர் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. இது ஒருதலைபட்சமானதாகும். மேலும் அப்பகுதியில் பகுதியில் வசிப்பவர்களுக்கு அரசின் அனுமதியுடன் மின் இணைப்பு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பல ஆண்டுகளாக அரசு வழங்கி வந்துள்ளது. தற்போது குடியிருப்புகளை அகற்றுவது நியாயமில்லை. எனவே உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்,’’ என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அதனால் பெத்தேல் நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதில் தற்போது அங்கு இருக்கும் சூழலே நீடிக்க வேண்டும். இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறது என உத்தரவிட்டனர். பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தற்போது உள்ள சூழல் நீடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை என தெரியவந்துள்ளது.

Tags : Enchambakkam ,Nagar ,ICourt ,Supreme Court ,Tamil Nadu government , Enchambakkam Bethel Nagar Occupancy Issue; Interim stay on ICourt order: Supreme Court directs Tamil Nadu government to respond
× RELATED போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தமிழக...