×

உட்கட்சி விரிசலை அம்பலப்படுத்திய பொன்னையனின் ஆடியோ: அதிமுகவில் ‘ரூட் தல’ யார்? குழப்பத்தில் தொண்டர்கள்

ஒரு மரம், புயலுக்கே அசராமல் நீண்ட நாட்கள் கம்பீரமாக நிற்க வேண்டும் என்றால், அதன் வேர்கள் மிக வலிமையாக இருக்க வேண்டும். வேர் வலுவிழந்தால், மரம் ஆட்டம் கண்டு சாய்ந்து விடும். அந்த நிலைமை தான் தற்போது அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட பல மூத்த தலைவர்களிடையே பிரச்னை வந்தபோது கூட, இந்தளவுக்கு வன்முறை மற்றும் கோஷ்டி பூசல் வெடித்ததில்லை. இன்று இரட்டை இலை சின்னத்துக்கும், அதிமுக தலைமை அலுவலகத்துக்கும் உரிமை கோரி பல கிளை அணிகள் உருவாகி உள்ளன. இதனால், அதிமுகவை வழிநடத்துவதில் ‘ரூட் தல’ யார் என்ற குழப்பம் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.

அதிமுக வரலாற்றிலேயே இப்படி ஒரு பொதுக்குழுவை யாரும் சந்தித்து இருக்க மாட்டார்கள். காரணம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பதவி சண்டையால் அவரவர்களுக்கு ஏற்றார்போல் அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, பன்னீர்செல்வம் அதிமுக, பழனிசாமி அதிமுக, சசிகலா அதிமுக, டிடிவி தினரகனின் அமமுக என உருவாகி உள்ளன. இதுதவிர, எடப்பாடி அணிக்குள்ளேயே புதிய அணிகளும் உருவாகி உள்ளதற்கு பொன்னையனின் ஆடியோவே சாட்சி. எம்ஜிஆரின் விசுவாசியும், மூத்த தலைவருமான பொன்னையனும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நாஞ்சில் கோலப்பன் என்ற நிர்வாகியும் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த ஆடியோவில் அதிமுகவின் உட்கட்சி பூசலை அக்கு அக்காக பொன்னையன் அம்பலப்படுத்தி உள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பதவி சண்டைக்கு காரணமான சாதி அரசியல், ஒவ்வொரு எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகளை எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வளைத்தது எப்படி, ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் எவ்வளவு பணம் வாங்குகிறார்கள், எவ்வளவு கமிஷன் கொடுக்கப்படுகிறது, சாதி பலம் தேவைப்படுவதால் ‘மணி’கள் அடிக்கும் பெல்லுக்கு தலையாட்டும் எடப்பாடி என பல்வேறு விஷயங்களை பொன்னையன் போட்டு உடைத்துள்ளார். இது, அதிமுகவில் பெரும் விவாதத்தை உருவாக்கி உள்ளது.

‘உன்னை நம்பிதானே எல்லாத்தையும் சொன்னேன்... இப்படி உடைச்சிட்டியே குமாரு...’ என்பது போல் எடப்பாடி மற்றும் ஆதரவாளர்கள் முணுமுணுத்து வருகின்றனர். எல்லாத்துக்கும் சரமாரி பதிலடி தரும் சி.வி.சண்முகம், ‘பொன்னையன் தன்னுடைய குரல் இல்லை என்று கூறுகிறார். அதை நாங்கள் நம்புகிறோம். வயதில் மூத்தவர் என்பதால் விமர்சனம் செய்ய விரும்பவில்லை’ என பின்வாங்கினார். ஆனால், பொன்னையனின் ஆடியோவில் இருந்த எந்த குற்றச்சாட்டையும் அவர் மறுக்கவில்லை. இதேபோல், எடப்பாடி தரப்பிலோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பிலோ வாயே திறக்கவில்லை.

பொதுவாக கட்சி உள் விவகாரங்களை வெளியே கொட்டினால், கட்சிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக அந்த நபர் கட்சியை விட்டு நீக்கப்படுவார். ஆனால், பொன்னையன் விவகாரத்தில் அப்படி செய்தால், உண்மையை கொட்டியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தனக்கு எதிராக திரள்வார்கள் என்று எடப்பாடி புதிய ரூட்டை எடுத்துள்ளார். அதாவது, அமைப்பு செயலாளராக இருந்த பொன்னையனை, எம்ஜிஆர் மன்ற செயலாளர் என்று டம்மி பதவிக்கு மாற்றி உள்ளார். ஏற்கனவே, பன்னீர்செல்வம் அதிமுக, பழனிசாமி அதிமுக, சசிகலா அதிமுக, டிடிவி தினரகனின் அமமுக என பல அணிகள் செயல்பட்டு கொண்டு இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சசிகலாவுடன் தனது கட்சியை (அண்ணா திராவிடர் கழகம்) இணைத்து அவருடைய சகோதரர் திவாகரன், நானும் அதிமுகவின் ஒரு அணிதான் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார்.

இவர் அதிமுகவில் கட்சியை இணைத்து கொண்டதாக கூறுகிறார். சசிகலாவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. அவர் அதிமுகவுக்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ‘மாப்ள அவருதான் ஆனா சட்டை என்னது’ என்பது போல் அதிமுக பொதுச்செயலாளர் நான்தான் என்று கூறி ஊர் ஊராக தொண்டர்களை சந்தித்து வருகிறார் சசிகலா. இன்னொரு பக்கம், டிடிவி.தினகரன் அதிமுகவை மீட்டெடுக்கத்தான் அமமுக தொடங்கப்பட்டது என கூறி, அவர் ஒரு ரூட்டில் சென்று கொண்டிருக்கிறார். தற்போது, அதிமுக எங்களுக்குதான் சொந்தம் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், எடப்பாடி ஆதரவாளர்கள் போட்டி போட்டு தேர்தல் ஆணையம், நீதிமன்றம், சட்டப்பேரவை, வங்கிகளில் மனு அளித்துள்ளனர்.

இதுதவிர, தற்போது பொன்னையன் பேசிய ஆடியோவில் எடப்பாடியை ஓரம்கட்டி கே.பி.முனுசாமி ஒற்றை தலைமைக்கு வர முயற்சித்து வருகிறார் என்று கூறி உள்ளார். எம்ஜிஆர் காலத்தில் இருந்து அணி அணியாக மாறி வரும் கே.பி.முனுசாமி ஒற்றை தலைமை போர்க்கொடி தூக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவால் ஓரம்கட்டப்பட்ட கே.பி.முனுசாமி, ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது அவருடன் இணைந்து துணை ஒருங்கிணைப்பாளரானார். பின்னர், மாநிலங்களவை எம்பியானார். 4 மாதத்தில் எம்பி பதவியை ராஜினாமா செய்து 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி நின்று வெற்றி பெற்றார். பின்னர், கல் குவாரி, பெட்ரோல் பங்க் என தனது தொழில்களையும் பெருக்கி கொண்டார். தற்போது, அதிமுகவில் நடக்கும் சாதி அரசியல் சண்டையால் எடப்பாடி பக்கம் சாய்ந்து, ‘வளர்த்த கிடா மார்பில் பாய்வது’ போல் ஓபிஎஸ்சை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

தற்போது எடப்பாடி அதிமுகவில், கொங்கு வேளாளர் கவுண்டர் அணி, வன்னியர் அணி, முக்குலத்தோர் அணி என பல அணிகள் உருவாகி கொண்டு இருக்கிறது. குறிப்பாக, 4 மாவட்டத்தில் உள்ள கொங்கு வேளாளர் அணியை சேர்ந்த 42 எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி கையில் உள்ளனர். எடப்பாடிக்கு 9 எம்எல்ஏ ஆதரவு மட்டுமே உள்ளது என்று பொன்னையன் தெரிவித்துள்ளார். இதனால், ‘மணி’களை ஒருங்கிணைத்து அவர் சார்ந்த நிர்வாகிகளை கையில் போட்டு கொண்டு வலம் வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அதேநேரத்தில் வடமாவட்டங்களில் அதிமுகவில் உள்ள 19 எம்எல்ஏக்களை கொண்ட சமூகம் வன்னியர் சமூகம்தான். இதன் தலைவராக உருவாகி வரும் கே.பி.முனுசாமி ஒற்றை தலைமைக்கு வரும் முயற்சிக்கான பணிகளை பின்னால் இருந்து செய்து வருவதாக அதிமுக அதிருப்தி தலைவர்கள் கூறுகின்றனர். இதனால், எடப்பாடியின் தற்காலிக பொதுச்செயலாளர் என உருவாக்கப்பட்ட பதவி எவ்வளவு காலம் நிலைக்கும் என்பது கேள்விக்குறிதான். கே.பி.முனுசாமிக்கு போட்டியாக அதே சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகளை இழுக்க சி.வி.சண்முகமும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். கே.பி.முனுசாமிக்கும், சி.வி.சண்முகத்துக்கும் வார்த்தை மோதல் உள்ளதால், இதை கவுரவ பிரச்னையாக கருதி பலத்தை நிரூபிக்க நேரடி சண்டையில் இருவரும் இறங்கி உள்ளனர்.

அதே நேரத்தில் விஜயபாஸ்கர் தலைமையில் மாஜி அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜு போன்ற தென் மாவட்ட நிர்வாகிகள் பலரும் புதிய ரூட்டை போட்டு, ஒரு அணியை உருவாக்கி வருகின்றனர். இவர்களுக்கு எச்சரிக்கை மணி அடிப்பதுபோல் பொன்னையன் ஒரு அணியை உருவாக்க முயற்சித்து வருகிறார். இந்த அணிக்கு யாரும் தலைமை கிடையாது. சாதி பலம் இல்லாத தலைவர்கள்தான் இதில் உள்ளனர். குறிப்பாக ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், தளவாய்சுந்தரம் போன்றோர் சாதி பலம் இல்லாமல் அதிமுக மெஜாரிட்டி பக்கம் என்று உள்ளனர். இதனால்தான், எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் யாரும் விஸ்வாசமாக இல்லை என்று பொன்னையன் தெரிவித்திருந்தார். இதனால், எம்ஜிஆர் விசுவாசிகள், ஜெயலலிதா விசுவாசிகள் மற்றும் அதிருப்தி தலைவர்கள், மாஜி மாவட்ட செயலாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து ஒரு அணியை பொன்னையன் மறைமுகமாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு பல அணிகள் உருவாகி உள்ளதால், அதிமுகவை வழி நடத்துவது யார் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. ‘நமக்கு எதுக்கு வம்பு... எல்லாரும் அடிச்சிக்கிட்டு ஒரு முடிவுக்கு வரட்டும்...’ அந்த கூட்டத்துல இணைந்து கொள்ளலாம் என்று இலவு காத்த கிளி போல் அன்வர் ராஜா, மணிகண்டன் போன்ற கட்சியில் ஓரங்கட்டப்பட்டுள்ள தலைவர்கள் ஒரு பக்கம் காத்து கிடக்கின்றனர். அதிமுக தலைவர்களின் அணி சண்டையால் யார் அறிவிப்பை பின்பற்றுவது, யார் தலைமை நிர்வாகிகள், கட்சியை வழி நடத்துவது யார்? புதிய நிர்வாகிகள் நியமனம் செல்லுமா? அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்படுமா? கட்சி சின்னம் முடக்கப்படுமா என பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.  

பொன்னையன் கொளுத்தி போட்ட அதிமுக உட்கட்சி விவகாரம், இவ்வளவு நாட்கள் ஒலித்து கொண்டு இருந்த ஒற்றை தலைமை என்ற கோஷம் செயற்கையாக உருவாக்கப்பட்டது அம்பலமாகி உள்ளது. பள்ளியில் வகுப்பு தலைவனை தேர்வு செய்ய ஓட்டெடுப்பு நடக்கும். உதாரணத்துக்கு ‘ஏ’ என்ற நபரை தேர்வு செய்ய யார் யாரெல்லாம் ஆதரவு தருகிறீர்கள்? ‘பி’ என்ற நபரை தேர்வு செய்ய யார் யாரெல்லாம் ஆதரவு தருகிறீர்கள் என்று ஓட்டெடுப்பு நடக்கும். அதேபோல்தான், எடப்பாடி தனக்கு வேண்டிய எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் தான் சார்ந்த சமுதாய நிர்வாகிகளை வைத்து கொண்டு பொதுச்செயலாளர் நானே என்று பட்டம் சூட்டி கொண்டுள்ளார். ஓட்டெப்பில் தோல்வியடைந்த அணி தலைவனாக உள்ளவன் எப்போ தவறு செய்வான் அதை குற்றச்சாட்டாக சொல்லி அவனை பதவியில் இருந்து தூக்க திட்டம் போடுவான். இந்த பள்ளி கூட சண்டைதான் தற்போது அதிமுகவில் நடந்து வருகிறது. இந்த பள்ளிக்கூட சண்டையால் ‘எங்கே செல்லும் இந்த பாதை’ என்று அதிமுக நிலைமை மாறி உள்ளது. இதற்கு காலம் தான் பதில் சொல்லும்.  

எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் யாரும் விசுவாசமாக இல்லை என்று பொன்னையன் தெரிவித்திருந்தார். இதனால், எம்ஜிஆர் விசுவாசிகள், ஜெயலலிதா விசுவாசிகள் மற்றும் அதிருப்தி தலைவர்கள், மாஜி மாவட்ட செயலாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து ஒரு அணியை பொன்னையன் மறைமுகமாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கே.பி.முனுசாமி ஒற்றை தலைமைக்கு வரும் முயற்சிக்கான பணிகளை பின்னால் இருந்து செய்து வருவதாக அதிமுக அதிருப்தி தலைவர்கள் கூறுகின்றனர்.கே.பி.முனுசாமிக்கு போட்டியாக அதே சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகளை இழுக்க சி.வி.சண்முகமும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். கே.பி.முனுசாமிக்கும், சி.வி.சண்முகத்துக்கும் வார்த்தை மோதல் உள்ளதால், இதை கவுரவ பிரச்னையாக கருதி பலத்தை நிரூபிக்க நேரடி சண்டையில் இருவரும் இறங்கி உள்ளனர்.

Tags : Ponnaiyan ,Root ,Thala ,AIADMK , Ponnaiyan's audio exposes internal party rift: Who is the 'Root Thala' in AIADMK? Volunteers in confusion
× RELATED அன்னவாசல் அருகே தைல மரக்காட்டில் திடீர் தீ