இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி

சென்னை: இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்த அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக, கடந்த 11ம் தேதி நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் என்னை தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி. உங்களில் ஒருவனாக, கிளை செயலாளர் பொறுப்பில் தொடங்கி 48 ஆண்டுகளாக பணியாற்றி வரும் என்னை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு இந்த இயக்கத்தை தலைமை தாங்கி வழிநடத்தும் படி பணித்த உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி தெரிவித்து, நீங்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளேன்.

அதிமுகவில் பணியாற்றி வரும் மூத்த நிர்வாகிகள், தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பொது குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாநில செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், அமைப்பு நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், வார்டு வட்ட செயலாளர்கள் உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், கோடான கோடி தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதிமுக வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நல்வாழ்வுக்கும், ஜாதி மத பேதமின்றி, விருப்பு வெறுப்புகளுக்கு இடமின்றி என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்காகவே உழைப்பேன் என்று மனதார உறுதி கூறுகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: