×

பணி நியமனம் தொடர்பான விவகாரம்; நாகை மாவட்ட கல்வி அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பணி நியமனத்துக்கு பல முறை நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அமல்படுத்தாத நாகை மாவட்ட கல்வி அலுவலருக்கு எதிராக ஆசிரியை 3வது முறையாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நாகை மாவட்டத்தை சேர்ந்த வெண்ணிலா தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நாகை மாவட்டம், ஆயக்காரம்புலம் கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 2015ல் நியமிக்கப்பட்டேன். என் நியமனத்துக்கு ஒப்புதல் கேட்டு மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் காலதாமதம் செய்ததால், உயர் அதிகாரியிடம் முறையிட்டேன்.

என் கோரிக்கை பரிசீலித்த பள்ளிக்கல்வி இயக்குனர், இணை இயக்குனர் ஆகியோர், என்னுடைய பணி நியமனம் தொடர்பான கோப்புகளை விரைவாக பரிசீலிக்க மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டனர். அதன்பின்னரும் அவர் ஒப்புதல் அளிக்காததால், மீண்டும் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பணி நியமனம் தொடர்பான ஆவணங்களை பரிசீலித்து 8 வாரத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று கடந்த 2016ம் ஆண்டு டிச. 9ம் தேதி உத்தரவிட்டார். அதன்பின்னரும் அவர் ஒப்புதல் அளிக்காததால், அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீசை அனுப்பினேன்.

இதையடுத்து, என் பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து கடந்த 2017ம் ஆண்டு மார்ச் 14ல் நாகை மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்ற  அவமதிப்பு வழக்கை தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி, 6 வாரத்துக்குள் பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க பரிசீலிக்கும்படி கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார். ஆசிரியர் பணி நியமனத்துக்கு அனைத்து தகுதி இருந்தும், மீண்டும் என் பணி நியமனக் கோரிக்கையை நிராகரிக்கப்பட்டு  கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி உத்தரவிடப்பட்டது. இதனால் மீண்டும் 2வது முறையாக நீதிமன்ற  அவமதிப்பு வழக்கை தொடர்ந்தேன்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் மாவட்ட கல்வி அலுவலரை தண்டிப்பதால் எந்த பயனும் ஏற்படாது. அதனால், மனுதாரரின் பணி நியமனத்துக்கு 8 வாரத்துக்குள் ஒப்புதல் அளிக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டார். அதன்பின்னரும், பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க வில்லை. எனவே, 3வது முறையாக நீதிமன்ற  அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளேன். உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டும் என்றே அமல்படுத்த மறுக்கும் நாகை மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுகரசை நீதிமன்ற  அவமதிப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று  கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த  உத்தரவை மாவட்ட கல்வி அலுவலர் தொடர்ந்து அவமதித்து வருகிறார் என்று வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்க நாகை மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.  



Tags : Nagai District Education Officer ,Madras High Court , Matters relating to appointment; Contempt of court case against Nagai District Education Officer: Madras High Court orders
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு