×

திருவிடைமருதூர் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்-பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை

திருவிடைமருதூர் : திருவிடைமருதுார் வட்டாரத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் நலன் கருதி கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவிடைமருதூர், திருபுவனம், ஆடுதுறை, ஆவணியாபுரம் பகுதியில் 7 மேல்நிலைப் பள்ளிகள், பொறியியல் கல்லூரி, அரசு அலுவலகங்கள், வங்கிகள், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் என பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. இப்பகுதியில்தான் நவக்கிரக பிரதான தலங்களான சூரியனார்கோயில், சுக்கிரன் தலமான கஞ்சனுார் அக்னீஸ்வரர் கோயில், திருமங்கலகுடி பிராணநாதர், ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயில்கள் அமைந்துள்ளது.

மேலும் காரைக்கால், தரங்கம்பாடி, மயிலாடுதுறை, கும்பகோணம், திருப்பனந்தாள் என 5 சாலைகளின் சந்திப்பாக ஆடுதுறை இருப்பதால் பல கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கல்வி பயில ஆடுதுறைக்கு வருகை தர வேண்டி உள்ளது.இப்பகுதியில் தடம் எண் 1 ஆடுதுறை சுவாமிமலை மார்க்கம், தடம் தடம் எண்: 27 கும்பகோணம், ஆடுதுறை, திருப்பனந்தாள், அணைக்கரை மார்க்கம், தடம் எண் 15 கும்பகோணம் - அம்மன்குடி - ஆடுதுறை மார்க்கம், தடம் எண் 46 கும்பகோணம் -ஆடுதுறை - வடமட்டம் தென்கரை மார்க்கம், தடம் எண் :33 கும்பகோணம் - ஆடுதுறை - குத்தாலம்- தேரழந்துார் மார்க்கம், தடம் எண்: 53 கும்பகோணம் - ஆடுதுறை - கோமல் மார்க்கம்,தடம் எண்: 64 கும்பகோணம்- ஆடுதுறை - பந்தநல்லூர் மார்க்கம்,மற்றும் சில டவுன் பஸ்கள் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது.

இதனால் பள்ளி, கல்லூரி வந்து செல்லக்கூடிய ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பயனடைந்தனர்.ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று ஊரடங்கை காரணம் காட்டி பேருந்து போக்குவரத்தினை நிறுத்தினர். அதன் பிறகு மீண்டும் பள்ளிகள் திறந்து ஊரடங்கு முழுமையாக தளர்வு பெற்றும் நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் , பள்ளி, கல்லூரி நேரங்களில் வந்து செல்ல ஏதுவாக பேருந்து வசதி இல்லாமல் தொடர்ந்து அவர்கள் அவதிப்படுகின்றனர். வணிகர்கள் மற்றும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் தினமும் வரக்கூடிய ஒரு சில பேருந்துகளில் நெருக்கி கொண்டு ஏறி, படிகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்ய வேண்டிய அவலம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக மாணவிகள் தேவையான பேருந்துகள் இல்லாமல் பயணிகள் நிழற்குடையில் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. ஆகையால் இப்பகுதியில் கொரோனாவால் நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும் மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvidimarthur , Tiruvidaimarudur : Additional buses should be operated in Tiruvidaimaruduar area for the benefit of school and college students.
× RELATED திருவிடைமருதூர் அருகே களத்துமேட்டு விவகாரத்தில் இருதரப்பினர் மோதல்