×

₹10 லட்சம் கேட்டு கடத்தல் சிறுவனை கழுத்து நெரித்து கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை-திருவண்ணாமலை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே ₹10 லட்சம் கேட்டு சிறுவனை கடத்தி கழுத்து நெரித்து கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.திருவண்ணாமலை அடுத்த வெளுக்கனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். மத்திய பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி பரிமளா. இவர்களுக்கு 2 மகன்கள். அதில், இளைய மகன் வினோத்குமார்(12) என்பவர், கடந்த 20.10.2011 அன்று திடீரென காணாமல் போனார். தெருவில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த வினோத்குமார், காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல இடங்களில் தேடியும் சிறுவனை காணவில்லை.

இந்நிலையில், பெங்களூரு பஸ் நிலையத்தில் இருந்து ஒரு ரூபாய் பயன்படுத்தி பேசும் பொது தொலைபேசி மூலம் வினோத்குமாரின் தாய் பரிமளாவை ெதாடர்பு கொண்ட மர்ம ஆசாமி ஒருவர், சிறுவனை கடத்தி வைத்திருப்பதாகவும், ₹10 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.அதனால், சிறுவன் கடத்தப்பட்டிருப்பது உறுதியானது. எனவே, வினோத்குமார் காணாமல் போன நேரத்தில் அவனுடன் விளையாடி கொண்டிருந்த, அதே கிராமத்தை சேர்ந்த சாந்தி என்பவரது 12 வயது மகனிடம் போலீசார் விசாரித்தனர்.

அப்போது, தனது தாய் சாந்தியின் திட்டப்படி வினோத்குமாரை வீட்டுக்கு அழைத்துச்சென்று தனது வீட்டின் அறையில் அடைத்ததை ஒப்புக்கொண்டார். மேலும், போலீஸ் விசாரணையின் தீவிரத்தை உணர்ந்து, சிறுவன் வினோத்குமாரை கழுத்து நெரித்து கொலை செய்து வீட்டுக்கு பின்புறமுள்ள தோட்டத்தில் விறகுகளுக்கு அடியில் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்ெதாடர்ந்து, சாந்தி மற்றும் அவரது 12 வயது மகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், போனில் தொடர்பு கொண்டு மிரட்டியவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சாந்தியின் நண்பர்களான சென்னை புரசைவாக்கத்ைத சேர்ந்த சுபாஷ்(29), சென்னை திருநின்றவூரை சேர்ந்த பசுபதி(28) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.மத்திய பாதுகாப்பு படையில் பணிபுரியும் ராமகிருஷ்ணன் அனுப்பி வைக்கும் ஊதியத்தை, பரிமளா வங்கியில் சேமித்து வைத்திருக்கும் தகவல் தெரிந்த சாந்தி, அவரிடம் இருந்து பணத்தை பறிக்க திட்டமிட்டது தொடர் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை, கடந்த 11 ஆண்டுகளாக திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி ஜமுனா நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.அதன்படி, சிறுவனை கொலை செய்த குற்றத்துக்காக சாந்திக்கு ஆயுள் தண்டனையும், கடத்திய குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சுபாஷ், பசுபதி ஆகியோரது குற்றங்கள் உறுதிபடுத்தப்படாததால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அதோடு, இந்த வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த சாந்தியின் மகன் கைதாகும்போது 12 வயது என்பதால், அவனது மீதான வழக்கு மட்டும் சிறார் குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தனியாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தியை போலீசார் கைது செய்து, வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Tags : Thiruvannamalai court , Tiruvannamalai: A woman who kidnapped and strangled a boy near Tiruvannamalai after demanding ₹10 lakh was sentenced to life imprisonment.
× RELATED ₹10 லட்சம் கேட்டு கடத்தல் சிறுவனை...