×

விழுப்புரம் அருகே பரபரப்பு காதல் திருமணம் செய்த பெண் மர்ம சாவு-பாஸ்தா சாப்பிட்டதால் உயிரிழந்தாரா?ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

விழுப்புரம்/விக்கிரவாண்டி :  விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் இறந்தார். ஓட்டலில் பாஸ்தா சாப்பிட்டதால் இறந்ததாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஓட்டலில் ஆய்வு செய்தனர். விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி  அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகள் பிரதீபா (22). அதே  பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் விஜயகுமார் (22) வெல்டிங் வேலை செய்து  வருகிறார், ஒரே சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். இதற்கு இருவர் வீட்டிலும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து  வந்த நிலையில் கடந்த ஜூன் 13ம் தேதி பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இருவரும்  காதல் திருமணம் செய்து கொண்டு அன்னியூரில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில்  நேற்று முன்தினம் நண்பர்களுடன் சுற்றுலா சென்று விட்டு, மாலை வீட்டிற்கு  வந்தபோது திருவாமாத்தூர் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார்  உணவகத்தில் ஒயிட் பாஸ்தா என்ற உணவை வாங்கி பிரதீபா வாங்கி சாப்பிட்டுள்ளார்.  பின்னர் வீட்டிற்கு வந்தபோது, பிரதீபா வாந்தி எடுத்துள்ளார். தொடர்ந்து  அவரது உடல் நிலை மோசமானதால் பிரதீபாவை அவரது கணவர் விஜயகுமார் அருகிலுள்ள  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்,  அங்கு  பிரதீபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம்  குறித்து தகவல் அறிந்ததும் பிரதீபாவின் தந்தை  பழனி கஞ்சனூர் காவல்  நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் தனது மகள் சாவில் சந்தேகம்  இருப்பதாகவும், உணவில் விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் என புகார்  அளித்துள்ளார். இதனிடையே ஓட்டலில் சாப்பிட்ட உணவினால் தான் அவர் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பிரதீபா எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகே பிரதீபா சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே விழுப்புரம் புறவழிச் சாலையில் செயல்பட்டு வரும் உணவகங்களில், விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுகுந்தன் தலைமையிலான அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாஸ்தா செய்யும் இடம், உணவு தயாரிக்கும் இடங்களில் ஆய்வு செய்தனர். மேலும் நேற்று முன்தினம் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் பரிசோதனை செய்தனர். அந்த உணவின் தரத்தை அறிய பரிசோதனைக்காக கோவைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  இதனிடையே சம்பந்தப்பட்ட ஓட்டலில் சுகாதாரமின்றி தயாரிக்கப்பட்ட உணவுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், உணவுகளை சுகாதாரமாக தயாரிக்கும்படி அறிவுறுத்தினர். இச்சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Vilappuram , Villupuram/Vikravandi : A love-married woman died mysteriously near Villupuram. After eating pasta at the restaurant
× RELATED கிளியனூரில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் கைது