×

கனமழையால் கோதாவரி, கிருஷ்ணா நதிகளில் வெள்ளப்பெருக்கு

அமராவதி: கடலோர ஆந்திராவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல இடங்களில் வெள்ள நீர் புகுந்து மக்கள் தத்தளிக்கின்றனர். கடலோர ஆந்திராவில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்  காற்று வீசுகிறது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழையால் கோதாவரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தவலேஸ்வரம் நீர் தேக்கத்தில் 5,91,269 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வெள்ள பாதிப்பு பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர் பொது மக்களை படகில் மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்  கடந்த நான்கு நாட்களாக விஜயவாடா கோட்டத்தின் வழியாக இயக்கப்படும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போலாவரம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

இதனிடையே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக ஒடிசா, ஆந்திரா கடற்கரைப்பகுதியில் உருவாகியுள்ளது. இது தற்போது ஒடிசா, சட்டீஸ்கர் மற்றும் மகாராஷ்டிராவை நோக்கி நகர்கிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு வட ஆந்திரா மற்றும் கோதவரி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Tags : Godavari ,Krishna , Godavari and Krishna rivers flooded due to heavy rains
× RELATED மூச்சை அடக்கினால் மனது அடங்கும்