×

பெரம்பலூர் மதுர காளியம்மன் கோயிலில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத்தேர் பயன்பாட்டிற்கு வந்தது; அமைச்சர் சேகர்பாபு தகவல்.!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர், அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோயிலில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத்தேர் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர், அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோயிலில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சீர்செய்யப்பட்டு தங்கத்தேர் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இத்திருக்கோயிலில் உள்ள தங்கரதம் பல வருடங்களாக பக்தர்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் தங்கத்தேர் 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு உற்சவம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. அதன்பிறகு எந்தவித பணிகளும் செய்யப்படாமல் இருந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இத்திருக்கோயிலில் 17.06.2022 அன்று ஆய்வு மேற்கொண்டு தங்கரதத்தின் பணிகளை விரைந்து முடித்து திருத்தேர் வீதி உலா வர அறிவுரை வழங்கினார்.

அதன்படி தங்கத்தேர் பணி மேற்கொள்ளப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உபயதாரர்களாக கட்டணம் செலுத்தி தங்கத்தேரினை இழுத்து வழிபட்டனர். கோயில் உள்பிரகாரத்தில் ஒரு முறை வலம் வந்து தங்கத்தேர் மீண்டும் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. இனி கோயில் நடை திறக்கும் நாட்களில் மாலை 6.30 மணியளவில் தங்கத்தேர் இழுக்கப்படும். தங்கத்தேரினை இழுத்து வழிபட பக்தர்கள் ரூ.1,000 கட்டணத்தை கோயில் நிர்வாகத்தில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Tags : Perambalur Madura Kallyamman Temple ,Minister ,Segarbabu , Perambalur Madura Kaliamman temple came into use after 4 years; Minister Shekharbabu information.!
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...