×

நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தீவிரம் நிலச்சரிவு-வீடுகள் இடிந்து சேதம்-மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி : நீலகிரி  மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. வீடுகள் இடிந்து சேதமடைந்தன. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்  நீலகிரி  மாவட்டத்திலும் கடந்த 1ம் தேதி முதல் பருவமழை தீவிரமடைந்துள்ளது.  குறிப்பாக  கூடலூர், பந்தலூர், தேவாலா மற்றும் குந்தா உள்ளிட்ட பகுதிகளில்  கன மழை  பெய்து வருகிறது. இதுதவிர நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி,  அவலாஞ்சி,  எமரால்டு உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் பலத்த மழை பெய்து  வருகிறது.

நேற்று முன்தினம் இரவு  ஊட்டி-பார்சன்ஸ்வேலி சாலையில் குப்பை குழி அருகே  ராட்சத கற்பூர மரம்  சாலையின் குறுக்காக விழுந்தது. ஊட்டி-கூடலூர்  தேசிய  நெடுஞ்சாலையில் கிளன்மார்கன் சந்திப்பு அருகே கற்பூர மரங்கள்  விழுந்தன. இது  குறித்து தகவல் அறிந்ததும்  சம்பவ இடத்திற்கு  வந்த ஊட்டி  தீயணைப்பு  நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பவர்  ஷா  எனப்படும் இயந்திர வாள் கொண்டு மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்   செய்தனர்.

நேற்று காலை கூடலூர் சாலையில் காமராஜர் சாகர்  அணை அருகே மரம்  விழுந்து போக்குவரத்து பாதித்தது. உடனடியாக  தீயணைப்புத்துறையினர் இந்த  பகுதிக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினர். இதனால்  சுமார் 1 மணி  நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது. கூடலூர்:  கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் விடிய விடிய பெய்த கனமழையால் பாண்டியாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

கூடலூர்   தேவர் சோலை அடுத்துள்ளது நாலாவது மைல். இந்த  பகுதியில் கூடலூர்- வயநாடு   மாவட்டம் சுல்தான்பத்தேரி செல்லும் சாலை உள்ளது.   நாலாவது மைல் பகுதியில்   சாலை ஓரத்தில் மேற்புறமாக மூங்கில் புதர் இருந்தது. தொடர் மழையால்   நேற்று இந்த பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மூங்கில் புதர்   சாலையில் சரிந்து விழுந்தது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து   பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர், தீயணைப்பு,   போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பொக்லைன்   எந்திரம் மூலம் சாலையில் சரிந்து விழுந்த மண் மற்றும் மூங்கில் புதர்களை   அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதேபோன்று கூடலூர் சுங்கம்-தாலுகா   அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளி   வளாகத்தையொட்டி இருந்த பழமையான மரம் முறிந்து பள்ளி மீது விழுந்தது. இதில்   பள்ளியின் மேற்கூரை சேதம் அடைந்தது. தொடர்ந்து இந்த பகுதியில் மழை   நீடிக்கும் நிலை உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பேரிடர் மீட்பு   குழுவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

பந்தலூர்: பந்தலூரிலும் கனமழை பெய்து வருகிறது. நேற்று  பந்தலூர்  சேரங்கோடு    ஊராட்சிக்கு உட்பட்ட ஓனிமூலாவை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்லம்மா என்பவரது   வீடு இடிந்து விழுந்தது. தொடர்ந்து அய்யன்கொல்லி அருகே அத்திச்சால் பகுதியில் சேர்ந்த தொழிலாளி மினி மோகன் என்பவரது வீடும் மழைக்கு இடிந்து விழுந்தது. இதேபோன்று சேரம்பாடி   கோரஞ்சால் அண்ணாநகரில் கூலித்தொழிலாளி  ஆராயி என்பவரது வீடு மழைக்கு   சேதமானது. வீடுகள் இடியும் முன்பே அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான   இடங்களுக்கு சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அடுத்தடுத்து 3   வீடுகள் இடிந்து விழுந்த தகவல் கிடைத்தும் சம்பவ இடத்திற்கு சேரங்கோடு   ஊராட்சி துணைத் தலைவர் சந்திரபோஸ் மற்றும் வருவாய் ஆய்வாளர் விஜயன்   உள்ளிட்டோார் வந்து சேதம் குறித்து பார்வையிட்டு  ஆய்வு செய்தனர். இழப்பீடு   வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த   பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேலும் பல இடங்களில் சேதம்   ஏற்படும் ஆபாயம் உள்ளதாக இந்த பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

கனமழை  பெய்ய வாய்ப்புள்ளது என  சென்னை வானிலை மையம்  தெரிவித்துள்ளதால்  நீலகிரி மாவட்டத்திலும் மழை  தொடரும் என  எதிர்பார்க்கப்படுகிறது.  இதனைடுத்து  அனைத்து துறைகளும்  உஷார்படுத்தப்பட்டு மழை  பாதிப்புகளை எதிர்கொள்ளும்  வகையில் தயார்  நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  மழையால் பாதிக்கப்படும் மக்களை  தங்க  வைப்பதற்காக 456 நிவாரண முகாம்களும்  தயார் நிலையில்  வைக்கப்பட்டுள்ளன.

மக்கள் கூட்டம் குறைவு

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல்  காற்றுடன் கனமழை பெய்ததால்  கடுங்குளிர் நிலவியது. ஊட்டி நகரிலும், ஊட்டி படகு  இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் குறைவாகவே  காணப்பட்டது. நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து  வருவதால்  அணைகளில் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர துவங்கியுள்ளது.

மழையளவு

நீலகிரி  மாவட்டத்தில் கடந்த 24  மணி நேரத்தில் பெய்த மழையளவு காலை 8.30 மணி  நிலவரப்படி (மிமீட்டரில்) வருமாறு:  ஊட்டி 10.7, நடுவட்டம் 49, கல்லட்டி  8.6, கிளன்மார்கன் 35, குந்தா 15,  அவலாஞ்சி 93, எமரால்டு 25, அப்பர்பவானி  53, பர்லியார் 11, கூடலூர் 49,  தேவாலா 103, பாடந்தொரை 31, பந்தலூர் 47 என  மொத்தம் 735.30 மி.மீ., பதிவாகி  உள்ளது.

Tags : Nilgiris ,Landslides , Ooty: A landslide occurred in the Nilgiri district as the monsoon intensified. Houses were destroyed.
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு...