செங்கம் : செங்கம் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் விவசாய கிணற்றில் விழுந்து தத்தளித்தது. தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி மானை உயிருடன் மீட்டனர்.
செங்கம் அடுத்த இறையூர் கிராமம் அருகே வனப்பகுதியில் மான்கள், பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்கின்றன. இங்குள்ள மான்கள் தண்ணீர் தேடி கிராமத்திற்குள் வருவதும், விவசாய கிணறுகளில் தவறி விழுவதும் அடிக்கடி நிகழ்கிறது.
அதேபோல், நேற்று அதிகாலையும் தண்ணீர் தேடி இறையூர் கிராமத்திற்குள் வந்த புள்ளி மான் ஒன்று அங்குள்ள 50 ஆழமுள்ள விவசாய கிணற்றில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நிலத்தின் உரிமையாளர் உடனடியாக செங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வமணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து கிணற்றில் இறங்கி மானை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி மானை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர், அந்த மானை அருகில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.
தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த மான் கிணற்றில் தவறி விழுந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
