திரவுபதி முர்முவை சந்தித்ததால் சமாஜ்வாதி கட்சியுடன் முறிவு?; ஓம் பிரகாஷ் ராஜ்பர் விளக்கம்

லக்னோ: ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவை சந்தித்ததால், சமாஜ்வாதி - சுபாஸ்பா கட்சியுடனான உறவில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் (சுபாஸ்பா) தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பாஜக கூட்டணி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் திரவுபதி முர்முவின் அழைப்பின் பேரில் அவரை காளிதாஸ் மார்க்கில் சந்தித்தேன். அந்த கூட்டத்தில் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் இருந்தனர்.

முர்முவின் ஆதரவு கோரிக்கைக்கு மதிப்பளித்து நான் அவரைச் சந்தித்தேன். எங்களது கட்சியின் சார்பில் அவருக்கு ஆதரவு அளிப்பது குறித்து 4 நாட்களுக்குள் முடிவெடுத்து அறிவிக்கப்படும். சமாஜ்வாதி கட்சியுடன் எங்களது கூட்டணி தொடர்கிறது. அக்கூட்டணியில் இருந்து விலகப்போவதில்லை. ஆனால், எங்களுடனான உறவை அகிலேஷ் (சமாஜ்வாதி தலைவர்) முறித்துக் கொண்டால், அதன்பின் எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம்’ என்றார். பாஜக கூட்டணியில் அல்லாத சில கட்சிகள் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில், தற்போது ஓம் பிரகாஷ் ராஜ்பரும் ஆதரவு அளிப்பதாக கூறி வருவதால், சமாஜ்வாதி உடனான கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: