சத்தி அருகே தேசிய நெடுஞ்சாலையில், கரும்பு லாரியை வழிமறித்து நின்று நிதானமாக பசியாறிய காட்டு யானை; ‘விநாயகா வழிவிடு’ என கும்பிடு போட்ட டிரைவர்கள்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை, கரும்பு லாரியை வழிமறித்து கரும்புகளை பறித்து தின்று, நின்று நிதானமாக பசியாறியதால் தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அடம் பிடித்த யானையை, விநாயக கடவுளாக கருதிய டிரைவர்கள், ‘விநாயகா வழிவிடு’ என வணங்கி வழி அனுப்பி வைத்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் அதிக அளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கரும்பு அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் லாரிகளில் பாரம் ஏற்றப்பட்டு சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்வது வழக்கம்.

நேற்று காலை தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக கர்நாடக எல்லை பகுதியான காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கரும்பு லாரியை வழிமறித்ததால் லாரி டிரைவர் சாலையில், உடனடியாக பிரேக் போட்டு லாரியை நிறுத்தினார். இதைத்தொடர்ந்து லாரியின் அருகே வந்த காட்டு யானை, தனது தும்பிக்கையால் லாரியில் இருந்த கரும்பு துண்டுகளை பறித்து சுவைத்தபடி வெகு நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தது. இதன் காரணமாக தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அப்போது வரிசையில் நின்றிருந்த டிரைவர்கள், ‘‘விநாயகா வழிவிடு, விநாயகா வழிவிடு’’ என காட்டு யானையை பக்தியுடன் கும்பிட்டு பரவசமானார்கள். இதைத்தொடர்ந்து காட்டு யானை சிறிது நேரம் கழித்து அங்கிருந்து சென்றது. இதனால், வாகன போக்குவரத்து அரைமணி நேரம் பாதித்து வாகன ஓட்டிகளிடம் பரபரப்பு ஏற்பட்டது. பண்ணாரியம்மன் சோதனைச்சாவடியில் இருந்து, காரப்பள்ளம் சோதனைச்சாவடி வரையிலான வாகனப் போக்குவரத்தை இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை தமிழக அரசு, நீதிமன்ற உத்தரவுப்படி தடை செய்துள்ளது. இதேபோல, காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் இருந்து சில கி.மீட்டர் தூரத்தில் உள்ள கர்நாடக மாநில செக்போஸ்ட்டிலும் இரவு நேரத்தில் வாகனங்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனாலும் இந்த வழியாக பகலில் செல்லும் வாகனங்களை காட்டு யானைகள் வழிமறிப்பதும், அட்டகாசம் செய்வதும் தொடர்கதையாக உள்ளது. இதுபோன்ற சமயங்களில், யானைகள் வாகன ஓட்டிகளுக்கு உயிர் பயம் காட்டுவதும், சில நேரங்களில் துரத்திக்கொண்டு வருவதும், வாகனங்களில் செல்லும் கரும்பு, வாழைகளை தின்று ருசிபார்த்து அனுப்பும் ருசிகர சம்பவங்களும் அரங்கேறுவது உண்டு. அதன்படி, யானையை, விநாயக கடவுளாக வணங்கி டிரைவர்கள் பரவசம் அடைந்த சம்பவம் அப்பகுதியினரிடம் பரபரப்பாக பேசப்பட்டது.

Related Stories: