×

தாளவாடியில் பதுங்கி, மிரட்டும் ஆட்கொல்லி யானை; அடர்ந்த வனத்தில் விரட்ட கும்கிகள் மூலம் வனத்துறை வியூகம்

சத்தியமங்கலம்: தாளவாடியில் மிரட்டி வரும் ஆட்கொல்லி யானையை தேடும் பணியில் ஈடுபட்ட  வனத்துறையினர், 2 கும்கி யானைகளை பயன்படுத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள், விரட்ட வியூகம் வகுத்துள்ளனர். தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டகாஜனூர், இரியபுரம், தர்மபுரம், திகினாரை கிராமப் பகுதிகளில் ஒற்றை காட்டு யானை தினமும் இரவில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இந்நிலையில், அப்பகுதியில் உலா வந்த காட்டு யானை, வயலில் காவல் பணியில் இருந்த தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மல்லப்பா என்பவரை கடந்த 4 தினங்களுக்கு முன்பு மிதித்துக் கொன்றது.  

வனத்துறை உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஆனைமலையில் இருந்து சின்னத்தம்பி மற்றும் ராஜவர்தன் என இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தாளவாடி வனத்துறையினர், வனக்குழுவினர் இணைந்து, 2 கும்கி யானைகளுடன் ஆட்கொல்லி யானை வனப்பகுதியில் உள்ளதா? என தீவிர ரோந்து பணி மேற்கொண்டு கண்காணித்தனர். ஆட்கொல்லி யானை வனப்பகுதியில் இருக்கும் இடத்தை வனக்குழுவினர் கண்டறிந்தனர் இதையடுத்து 3 கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறும் போது கும்கி யானைகளை பயன்படுத்தி ஆட்கொல்லி யானையை அடர்ந்த வனப்பகுதியில் மீண்டும் விரட்டியடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பதுங்கி, பதுங்கி மிரட்டி வரும் ஆட்கொல்லி யானை எந்த நேரமும் தாக்கலாம் என, தாளவாடி மலைப்பகுதி மக்கள் கடும் கலக்கத்துடன் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், கும்கிகளை கொண்டு அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட அதிகாரிகள் வகுத்துள்ள வியூகமும், முயற்சியும் பெரிதும் ஆறுதல் அடையச் செய்துள்ளது.

Tags : Talavadi , A man-killing elephant stalking and threatening Talavadi; Forestry strategy by driving kumkis in dense forest
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்த புள்ளி மான்